Vidya Bharati meet and discusses on Changing scenario of education in India


வித்யாபாரதியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், செப் 21 முதல் 23 வரை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் இதில் கலந்துக்கொண்டுள்ளனர். விவேகானந்தா கல்வி குழுமத்தின் தலைவரும் , வித்யாபாரதி (தென்னிந்தியா) தலைவருமான திரு. T. சக்கரவர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். 

மாறிவரும் சூழலில் தேசிய மற்றும் உலகளவில் கல்வித்துறை சந்திக்கும் சவால்கள் குறித்தும், நமது இந்திய கல்வி முறையை எவ்வாறு சிறப்பாக்க முடியும் என்பது குறித்தும் விவாதங்கள் நடைபெற்றது. இன்றைய மாணவர்கள் பல்வேறு முனைகளில் இருந்து சவால்களை சந்தித்து வருகின்றனர். மன அழுத்தமும் அதிகமாக உள்ளது. இவைகளை களையும் விதத்தில் கல்வி இருக்க வேண்டும். கல்வி அறிவுடன், மனப்பக்குவம், நன்னெறிகள், பண்புகள், தன்னம்பிக்கை போன்றவைகள் இருந்தால் மட்டுமே ஒரு மாணவனால் வெற்றிபெற முடியும். இவற்றையெல்லாம் உள்ளடிக்கிய கல்விமுறையை தான் வித்யாபாரதி தனது பள்ளிக்கூடங்களில் வழங்கி வருகிறது. 

இன்றைக்கு இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது, மாணவர்களால் மிக சுலபமாக எந்த ஒரு விஷயத்தையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இது அதிகரித்தால், இன்னும் சில ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை இருக்காது என்று பொதுமக்கள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் நமது நாட்டின் கலாச்சாரத்தோடு பிணைந்துள்ள குரு - சிஷ்ய உறவு முறை மிக சிறப்பாக உள்ளது. எனவே ஒரு போதும் கல்வி நிறுவனங்களின் தேவை என்றைக்கும் இருக்கும் . ஒரு மாணவன் தனது ஆசிரியர், பெற்றோர் மற்றும் சமூகத்துடன் இணைந்து வாழ இந்த கல்வி முறை அவசியம். 

மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய கல்வி கொள்கை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

வித்யாபாரதி அமைப்பு தேசம் முழுவதும் 23,000 பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறது. இவற்றில் ஏகல் வித்யாலயா எனப்படும் 10,000 ஓராசிரியர் பள்ளிகளும் அடக்கம். இவைகளில் 39 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள், 1,41,000 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகள், நக்சல் நடமாட்டம் கொண்ட பிரதேசங்கள், போன்ற இடங்களில் அரசு பள்ளிகளோ அல்லது தனியார் பள்ளிகளோ இல்லை. அங்குள்ள மக்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள், அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி அளித்தல் அவசியம், இதனை நிறைவேற்றும் பொருட்டு, அப்பகுதிகளில் கல்வி நிறுவனங்களை நிறுவ வித்யா பாரதி திட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தின் பெருமைகளையும், கலாச்சாரங்களையும் போற்றும் வகையில் ஒரு கண்காட்சியும் குரோம்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது . 

Post a Comment

0 Comments