அந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள்-5 (Those 15 days)

ஆகஸ்ட் 5
பிரஷாந்த் போலெ 
ஜம்முவிலிருந்து ராவல்பிண்டி வழியாக லாகூர் சென்றார் காந்தி. வழியில் ஒரு அகதிகள் முகாம் இருந்தது. கோடீஸ்வரர்களாக இருந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லிம்களால் விரட்டப்பட்டு, இந்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மிகவும் கொந்தளித்து இருந்தனர், காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் வெறுப்போடு இருந்தனர். இருப்பினும், இந்த முகாமில் உள்ளோரை சந்திக்க காந்தி சென்றார். ஒரு மாதம் முன்பு 15,000 பேர் இந்த முகாமில் இருந்தனர், ஆனால் அவ்விடம் பாகிஸ்தான் வசம் போகப்போகிறது என்பதை அறிந்து பலர் கிழக்கு பஞ்சாப் நோக்கி ஓடி சென்று விட்டனர்.

9000 பேர் இருந்த அந்த முகாமில் ஒரு இளம் பெண் கூட இல்லை, காரணம் தங்கள் வீடுகளிலிருந்து தப்பி முகாம் நோக்கி வந்துகொண்டிருந்த இளம்பெண்கள் அனைவரையும் பாகிஸ்தானின் முஸ்லீம் தேசிய படை பாலியல் துன்புறுத்தி கொன்றுவிட்டிருந்தது. சேரும் சகதியுமாக இருந்த அந்த முகாமில் காந்தி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து காந்தி பேச துவங்கினார். முகாம் இருக்கும் இடம் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் வசம் வர வேண்டும், அது இல்லாமல் பாகிஸ்தானுக்கு சென்றால் தாங்கள் கொல்லப்படுவது உறுதி என்று அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

ஆனால் காந்தியோ "முஸ்லிம்களுக்கு அவர்கள் கேட்ட பாகிஸ்தான் கிடைத்து விட்டது. ஜின்னாவும் அமைதி மற்றும் நட்பை விரும்புகிறார். எனவே நீங்கள் பயப்படுவது போல, முஸ்லிம்கள் உங்களை தாக்கமாட்டார்கள். நான் நவ்காளி வருவதாக உறுதி அளித்திருக்கிறேன், இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15 அன்று நான் உங்களுடனேயே இருந்திருப்பேன்" என்று கூறி, டாக்டர் சுஷீலா நாயரை, தனது பிரதிநிதியாக முகாமில் தங்க சொன்னார். இது அங்கிருந்து ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் திருப்தி படுத்தவில்லை, மாறாக கோபம் மற்றும் நம்பிக்கையின்மையை தான் வரவழைத்தது.
----------------------------------
அதே நாள் லாகூரில், ஹிந்துக்களும் சீக்கியர்களும், தங்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து முழுஅடைப்பு நடத்தினர். மூன்று மாதங்களுக்கு முன்பு முஸ்லிம்களால் துவக்கப்பட்ட தாக்குதல் நிற்கவே இல்லை. முஸ்லிம்கள் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மத்தியில் பெரும் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டுவதில் உறுதியாக இருந்தனர். கோவில்களும், குருத்வாராக்களும் நிறைந்து இருந்த லாகூர், இந்த நிலைக்கு ஆளானது துரதிருஷ்டமே. லாகூர் கவர்னர் கலவரத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று ஆலோசனை நடத்தி வந்தார், அவருக்கும் பிரிவினையில் உடன்பாடு இல்லை.

லாகூரில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஏராளமாக இருந்தனர். தினசரி ஷாகாவிற்கு 100 முதல் 300 பேர் வரை வருவார்கள். அந்த ஊரில் 150 ஷாகாக்கள் இருந்தன. ஆனால் பிரிவினை நெருங்க நெருங்க, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிந்துக்களும் சீக்கியர்களும் பாரதம் நோக்கி வந்த காரணத்தால், ஷாகா நின்று போனது.
------------------------------------
லாகூரில் இருந்து சுமார் 1200 கிமீ தள்ளி இருந்த சிந்து மாகாணத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி விமானம் மூலம் பயணம் செய்தார். அவருடன் ஆபாஜி இருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்களில் ஒருவர் திரு L.K. அத்வானி. குருஜி விமானத்தை விட்டு இறங்கியதும் "பாரத் மாதா கீ ஜே" என்கிற கோஷம் விண்ணை பிளந்தது. 
அங்குள்ள ஹிந்துக்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் ஊட்டும் வகையில், நகரின் பிரதான சாலைகளில் 10000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், சங்க சீருடையில் கலந்துக்கொண்ட பேரணி நடைபெற்றது. அடுத்த 10 நாட்களில் பாகிஸ்தானாக போகும் ஊரில், இந்த பேரணி நடைபெற்றது மிகப்பெரிய சாகசமாகும்.

-----------------------------------------------------------
அதே சமயம் தில்லியில், தனது அமைச்சரவை சகாக்களின் பொறுப்புக்கள் குறித்து நேரு ஆலோசனை செய்து வந்தார். "இந்தியாவின் ஆடிட்டர் ஜெனரலாக பூர்தி ஸ்டாக் என்கிற ஆங்கில அதிகாரியே தொடரலாமா?" என்று கேட்டு மவுண்ட் பேட்டன் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். "தொடரலாம்" என்று நேரு பதில் கடிதம் எழுதினார். அதே போல, தன்னுடன் இருக்கும் பணியாளர்களை தொடர்ந்து வைத்துக்கொள்ளலாமா என்றும், தான் இந்தியாவில் இருக்கும் வரை, தற்பொழுது தங்கி இருக்கும் வைஸ்ராய் மாளிகையில் தாங்கிக்கொள்ளலாமா என்று கேட்டு மவுண்ட் பேட்டன் நேருவுக்கு கடிதம் எழுதினார். "தங்கள் விருப்பம் போல செய்யுங்கள்" என்று நேரு பதில் அளித்தார்.
------------

லாகூரில் குருஜி கோல்வால்கர் மற்றும் சிந்து மக்களின் குருவான சாது T.L. வாஸ்வானி பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாஸ்வானி பேசுகையில் "ஹிந்துக்களுக்கு பக்கபலமாக ஆர்.எஸ்.எஸ். உள்ளது" என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து குருஜி கோல்வால்கர் பேசுகையில் "நமது நாட்டிற்கு மிகப்பெரிய துன்பம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியே இதற்கு காரணம். முஸ்லீம் லீக் வன்முறை மற்றும் வெறியாட்டத்தின் மூலம் பாகிஸ்தானை அடைந்துள்ளது, காங்கிரஸ் அவர்கள் முன் மண்டியிட்டு விட்டது. முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள் முற்றிலும் இந்தியதன்மை கொண்டது, அரேபிய தன்மை இல்லை. ஹிங்கலாஜ் தேவியால் புனிதமான இந்த பூமி, ராஜா தாஹிர் ஆண்ட பூமி பாரத்தை விட்டு பிரிவது மிக வருத்தத்திற்கு உரியது. ஆனால் இந்த வருத்தம் நீண்ட நாட்கள் நீடிக்காது. அது வரை ஹிந்துக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்" என்று பேசினார். குருஜியின் பேச்சு அங்குள்ள ஹிந்துக்களுக்கு சீக்கியர்களுக்கு தெம்பை தந்தது. 

இந்த கூட்டத்திற்கு பிறகு கராச்சியின் முக்கிய நபர்களுடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு பத்திரிக்கையாளர் குருஜியை பார்த்து "பிரிவினையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை, ஒரு கால் புண்ணாகி போய், உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின், உயிரை காக்க நாம் ஒரு அங்கத்தை இழப்பதில் தவறில்லையே" என கேட்டார். பதில் அளித்த குருஜி "நீங்கள் சொல்வது சரியே, ஒருவனது மூக்கை அறுத்து விட்டால் அவன் வாழ்வான் தானே" என கேட்டார்.

ஏராளமான ஹிந்துக்கள் தங்களது எதிர்காலம் குறித்த அச்சத்துடன் இருந்தனர், சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என குருஜியிடம் ஆலோசனை செய்தனர். இதன் பின்னர் அடுத்தடுத்து நடைபெற வேண்டிய பணிகளை முடுக்கி விட, குருஜி கூட்டத்திலிருந்து புறப்பட்டார்.

தில்லி அமைதியாக உறங்கி கொண்டிருந்தது. ஆனால் பஞ்சாப், சிந்து, வங்காளம், பலூச்சிஸ்தான் மாகாணங்கள் வன்முறையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தது. கராச்சியில் தபஸ்வி குருஜி, பிரிவினைக்கு பிறகு ஹிந்துக்களின் எதிர்காலம் என்னவாகும் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.

Post a Comment

0 Comments