ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் உச்சபட்ச அதிகார அமைப்பான அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) கூட்டம், ஆர்.எஸ்.எஸ் தலைமையகமான நாக்பூரில் மார்ச் 9, 10 மற்றும்11 ஆகிய தேதிகளில் நடந்தது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ மோகன்ஜி பாகவத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அகிலபாரத பிரதிநிதிகள், மாநில மற்றும் அகிலபாரத நிர்வாகிகள், ஆர்எஸ்எஸ்சின் குடும்ப அமைப்புகளின் அகிலபாரத பொறுப்பாளர்கள் உட்பட 1461 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு சங்கவேலையின் அனுபவங்கள், வரும் ஆண்டில் சங்க வேலையின் வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதோடு, சமூக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சாமாஜிக் சமரசதா திட்டத்தின் மூலம் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவ உணர்வை ஏற்படுத்த வெற்றிகரமான பல முயற்சிகள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தீண்டாமை, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்து பல பகுதிகளில் இணக்கமான சூழல் உருவாகியுள்ளன. அது தொடர்பான அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதோடு, எதிர்வரும் காலங்களிலும் சமுதாய இணக்க பணியை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானம்
ஆர்எஸ்எஸ் அகிலபாரத பிரதிநிதி சபையில், கடந்த ஆண்டு கூட்டத்துக்கு பிறகு மறைந்த வெவ்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழக பாஜவின் முதல் மாநில தலைவர் ஸ்ரீ நாராயண ராவ், தமிழகத்தை சேர்ந்த மூத்த பிரச்சாரக் ஸ்ரீ சுப்பாராவ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப் பிரிவின் முதல் பெண் அதிகாரியான ஸ்ரீமதி சரஸ்வதி ராஜாமணி, நடிகை ஸ்ரீதேவி, மும்பையை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூர்,மும்பையை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் முஜாபர் உசைன், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரியரஞ்ஜன்தாஸ் முன்ஷி,ஒடிஷாவை சேர்ந்த பிரபல பஜன் பாடகர் ஸ்ரீ அரவிந்த் முதுலி உட்பட 51 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
சங்கத்தில் 3
ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வது வழக்கம். அதன்படி ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீ மோகன்ஜி பாகவத் முன்னிலையில் நடந்த தேர்தலில், அகில பாரத பொதுச் செயலாளராக ஸ்ரீ சுரேஷ் ஜோஷி( பையாஜி ஜோஷி) மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
ஏர்கனவே அகில பாரத இணைப் பொதுச் செயலாளர்களாக இருந்த ஸ்ரீ சுரேஷ் சோனி, டாக்டர் கிருஷ்ண கோபால், ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபலே, ஸ்ரீ பாகய்யா ஆகியோரோடு, அகில பாரத செய்தித் தொடர்பாளராக இருந்த டாக்டர் மன்மோகண் வைத்யா, அகில பாரத இணை பௌத்திக் ப்ரமுக்( அறிவுசார் துறை) ஆக இருந்த ஸ்ரீ முகுந்தா ஆகிய 6 பேர் அகிலபாரத இணைப் பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஆர்எஸ்எஸ் அகிலபாரத செய்தித் தொடர்பாளராக ஸ்ரீ அருண்குமார் ஜி தேர்வு செய்யப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் தென்பாரத தலைவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீ வன்னியராஜன் அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரை அடுத்த திருவேடகம் விவேகானந்தா கல்லுõரி முதல்வராக பணியாற்றியவர். ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநில செயலாளராக ஸ்ரீ ஜெகதீசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரோட்டில் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், சிறு வயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வருகிறார்.
அமைப்பு ரீதியான வளர்ச்சி
அகில பாரத பிரதிநிதி சபாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் அதன் குடும்ப அமைப்புகளின் அமைப்பு ரீதியான பணிகள் மற்றும் புள்ளிவிவரங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டன.
2017-18ம் ஆண்டில் நாடு முழுவதும் 37 ஆயிரத்து 190
இடங்களில் 58 ஆயிரத்து 967
தினசரி சந்திப்புகள் நடக்கின்றன. இதுதவிர 16 ஆயிரத்து 405
இடங்களில் வாராந்திர சந்திப்புகளும், 7 ஆயிரத்து 976
இடங்களில் மாதாந்திர சந்திப்புகள் என நாடு முழுவதும் 83 ஆயிரத்து 348
இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைகள் செயல்படுகின்றன.
ஆர்எஸ்எஸ் மற்றும் அதில் பயிற்சி பெற்ற நபர்களால் நாடு முழுவதும் 1.70 லட்சம் சேவா காரியங்கள் நடத்தப்படுகின்றன.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சமூகத்தின் பலதரப்பினரிடையேயும் அதிகரித்துவரும் நம்பிக்கை மற்றும் ஆதரவால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேருவோர் எண்ணிக்கையும், ஆர்எஸ்எஸ் கிளைகளின் எண்ணிக்கையும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளது.
ஆர்எஸ்எஸ்சில் இணைவோம் என்ற வளைத்தளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2015ல் 31,
800 பேர் வலைத்தளம் வாயிலாக ஆர்எஸ்எஸ்சில் சேர்ந்தனர். அந்த எண்ணிக்கை 2016ல் 47,00ஆகவும், 2017ல் 71,800ஆகவும் உயர்ந்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்எஸ்எஸ்சில் இணைந்துள்ளனர்.
தாய் மொழியில் தொடக்கக் கல்வி
அழிந்துவரும் பாரதீய மொழிகளை பாதுகாத்து அவற்றை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
எந்த ஒரு தனி நபருக்கும், சமூகத்துக்கு அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதில் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதாக அகிலபாரத பிரதிநிதி சபை கருதுகிறது.
நம்முடைய கலாச்சாரம், உன்னதமான பாரம்பரியம் ஆகியவற்றை பாதுகாப்பதில் மொழிகள் முக்கியமானவை. எழுத்துபூர்வமான இலக்கியங்களை படிப்பதன் மூலம் கிடைக்கும் அறிவை காட்டிலும், வாய்வழியாக திரும்பத் திரும்ப சொல்லக் கேட்ட கதைகள், புராணங்கள்,
பாடல்களால் கிடைத்த அறிவு அதிகம்.
ஆனால், சமீபகாலமாக பாரதீய மொழிகள் பேச்சு வழக்கில் இருந்து மறைந்து வருவதால் மக்கள் உரையாடல்களில் பாரதீய மொழிகளில் உள்ள சொற்களுக்கு பதில் பிற மொழி சொற்கள் ஆக்கிரமித்து வருவது மிகப்பெரிய சவாலாகியுள்ளது.
எனவே இந்த நாட்டுக்கே உரிய, பாரதீய மொழிகளை பாதுகாத்து ஊக்குவிக்க அரசு, கொள்கை வகுப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஒட்டுமொத்த சமுதாயமும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு தொடக்கக் கல்வியானது தாய் மொழி அல்லது பாரதீய மொழிகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த கண்ணோட்டம் பெற்றோர்களுக்கும் வர வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்ப படிப்புகள், மருத்துவம் உட்பட எல்லா உயர் படிப்புகளுக்கான பாடத்திட்டம், தேர்வு எழுதுவதற்கான விருப்ப மொழித் தேர்வு ஆகியவற்றில் எல்லா பாரதீய மொழிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
எல்லா பிராந்திய மொழிகளிலும் நீட் தேர்வு எழுதலாம் என்ற மத்திய பாடதிட்ட வாரியத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதேபோன்று தேசிய அளவில் நடத்தப்படும் எல்லா போட்டித் தேர்வுகளிலும், எந்தெந்த தேர்வில் எல்லாம் பிராந்திய மொழிகளுக்கு வாய்ப்பு இல்லையே அந்த தேர்வுகளில் அவரவர் தாய்மொழி அல்லது விரும்பிய பாரதீய மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் பாரதீய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசு மற்றும் அரசுசாரா துறைகளில் நடக்கும் நியமனம் உட்பட எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் ஆங்கிலத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு பதில் பாரதீய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உட்பட ஒட்டுமொத்த சமுதாயமும், குடும்பத்தில் தினசரி நடைபெறும் உரையாடல்களானது அவரவர் தாய் மொழியில் இருக்க வேண்டும்.
பாரதீய மொழியில் உள்ள இலக்கியங்கள், புத்தகங்களை சேகரிப்பது, வாசிப்பது என்ற பாரம்பரிய பழக்கவழக்கத்தை மேலும் செம்மைபடுத்த வேண்டும்.
பாரம்பரியமாகவே தேசிய ஒற்றுமைக்கு மொழிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனவே ஒருவர் அவரது தாய்மொழி மீது பெருமிதம் கொண்டிருப்பதை போலவே பிற மொழிகளுக்கும் சமமான மதிப்பு, அந்தஸ்து வழங்க வேண்டும்.
பாரதீய மொழிகளை பாதுகாக்க, அவற்றை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்த தீர்மானம் அகிலபாரத பிரதிநிதி சபாவால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
டாக்டர். கே. குமாரசாமி
தலைவர்
ஆர்எஸ்எஸ்., வட தமிழகம்.
0 Comments