தேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்




ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் நாகபுரியில் விஜயதசமி (30.9.2017) அன்று ஆற்றிய பேருரை
மங்களகரமான விஜயதசமித் திருநாளைக் கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த ஆண்டு பத்மபூஷண் குஷக் பகுலா ரிம்போச்  அவர்களின் பிறந்த நூற்றாண்டு. இதுவே சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டும் சகோதரி நிவேதிதையின் 150வது பிறந்த ஆண்டும்கூட..

பௌத்தர்கள் போற்றும் குஷக் பகுலா
இமயமலை வட்டாரத்தில் வாழும் பௌத்தர்கள் அனைவரும் குஷக் பகுலா ரிம்போசே  அவர்களை  பதினாறு ததாகத புத்தர்களில் ஒருவரான பகுல் அர்ஹத்தின் அவதாரமாகப் போற்றுகின்றனர். சமீப காலத்தில், லத்தாக் பகுதியின் மிகவும் நேசிக்கப்பட்ட லாமா இவர். லத்தாக் பகுதியில் கல்வி மேம்பாடு,  சமுதாய சீர்திருத்தம், சமூக சீர்கேடுகளைக் களைதல், தேசிய சிந்தனையை எழுப்புதல் போன்ற பணிகளை இவர் சிறப்பாக செய்தார்.  1947ல், கபைலி பழங்குடியினர் என்கிற போர்வையில், பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியபொழுது, இவரால் உந்தப்பட்ட லத்தாக் இளைஞர்கள், நுப்ரா படையை தோற்றுவித்து, எதிரிகளை ஸ்கர்து நகர எல்லையிலேயே வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டார் குஷக் பகுலா ரிம்போசே..  மங்கோலியாவில் இந்தியாவின் தூதராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். 80 ஆண்டுக்கால கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், பண்டைய பௌத்த பாரம்பரியத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்கும் உள்ளூர் மக்களின் முயற்சியில் இவர் பங்களிப்பு ஈடு இணையற்றது. அதன் காரணமாக மங்கோலிய மக்களால் இவர் பெரிதும் போற்றப்படுகிறார்.  இதற்காக அவருக்கு 2001 ல்போலார் ஸ்டார்என்ற மங்கோலிய நாட்டின் சிவில் விருது வழங்கப்பட்டது.  அவரது ஆன்மீக ஞானம், தேசத்திற்காக அர்ப்பணிப்பு, சுயநலமில்லாத மக்கள் தொண்டு இவையே அவரை நாம் அனைவரும் போற்றுவதற்கும், வழிகாட்டியாக கருதுவதற்கும் காரணம். மனிதகுலத்திற்கு பாரதம் ஆற்றியுள்ள தொண்டுகள் குறித்து சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ சொற்பொழிவில் எவ்வித கருத்துக்களை எடுத்துரைத்தாரோ, அவ்வாறே தனது வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டினார் ஆச்சார்ய குஷக் பகுலா அவர்கள்.
நிவேதிதையின் திருத்தொண்டு
இந்த தேசிய கண்ணோட்டமே நமது பாரம்பரியம். இந்தப்  பார்வை தரவே ஆதி கவி வால்மீகி,  ராமபிரானை நாயகனாக கொண்ட ராமாயணம் படைத்தார். பக்தி இயக்கத்தின் முக்கிய துறவி ரவிதாஸ் இதேபோன்ற தேசிய சிந்தனைகளை பொதுமக்களிடையே,  தனது சொல்லாலும், செயலாலும் பரப்பினார்.  இதே தேசிய சிந்தாந்தத்தின் அடிப்படையில், சகோதரி நிவேதிதை, நமது சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஹிந்து சமுதாயம் மேலும் உயரவும் பல பணிகளை செய்தார். பாரதத்தின்  லட்சக்கணக்கான குழந்தைகளை அறியாமையிலிருந்தும் வறுமையிலிருந்தும் மீட்டெடுக்க சேவை செய்தார்.  அவர்களின் உள்ளங்கள் சொந்த மதத்திடமும் தாய்நாட்டிடமும் அன்பு பூண ஊக்குவித்தார்.
நமது சமுதாயம் தேசிய சிந்தனைகொண்டதாகிட நமது சிந்தனையாளர்களும் அறிஞர்களும் காலனிய சிந்தனை, மனப்பான்மை இவற்றின் கேடுகளிலிருந்து விடுபடவேண்டும். காலனியாட்சியால் எழுந்த இந்தக் கேடுகள் நமது மனதை ஆக்கிரமித்து, நம்மை சுய நிந்தையில் தள்ளியுள்ளன. நம்மைக் குழப்பி வருகின்றன. ஐரோப்பாவில் பிறந்து, அதன் கலாச்சாரத்தில் வளர்ந்தபொழுதும்  சகோதரி நிவேதிதை பாரதநாட்டு மக்களின் மனங்களில் நமது சிரஞ்சீவியான பண்பாடு பதியச் செய்துள்ளார்.  பாரதத்தின் அரும் பண்புகளிலும் தேசத்தின் லட்சியத்திலும் நாம் இணைந்திருக்க அவர் பணி உத்வேகமளிக்கிறது.
ராஷ்ட்ரம்என்பது...
ராஷ்ட்ரம்என்பது செயற்கையாக உருவாக்கப்படுவதில்லை.  ஆட்சி தான் தேசம் என்ற அதிகார வட்டார அடிப்படையில் அல்லாமல், ராஷ்ட்ரமாக நாம் வாழ்வது நமது மக்களிடமும் பண்பாட்டிலும் மையம் கொண்டது. பல்வேறு பிராந்தியங்கள், மொழிகள், சமயங்கள்,  ஜாதிகள், மரபுகள் என்று இருந்தாலும் உலகையே ஒரு குடும்பமாகப் பார்க்கும் அந்தப் பண்பாடே நம்மை இணைக்கும் உணர்வு இழை. இந்த மண்ணிலிருந்து தொன்று தொட்டே கூட்டாக நமக்கு கிடைத்த அனுபவங்கள்,   கூட்டாக நாம் செய்த முயற்சிகள்,  சத்தியத்தைக்  கண்டுணர்வதில் கூட்டாக நாம் பெற்ற அனுபவம் இவற்றிலிருந்துதான் தேசியப் பார்வையும் தேசிய லட்சியமும்  உருவாகியுள்ளது.  தனி மனிதன், குடும்பம், சமுதாய தளங்களிலும் இவை பிரதிபலிக்கிறது.. அப்பொழுதுதான் உண்மையில் ராஷ்ட்ரம் உருவாகி  உலகில் மிகவும் போற்றத்தக்கதாகிறது. உலக அரங்கில் எதிர்பார்க்கப்படும் பங்கினை ஏற்கும் தேசமே அர்த்தமுள்ள பங்களிப்பு தர முடியும். 

சாதனைகள் பல...
மெல்ல மெல்ல ஆனால் திட்டவட்டமாக அந்த சிரஞ்சீவியான சத்தியத்தை இன்றைய காலகட்டத்தில் ஓரளவுக்கு நாம் அனுபவிக்கிறோம். நமது முயற்சியால் யோகாவை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது, சுற்றுசூழல் குறித்த நமது அணுகுமுறைக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நமது பாரம்பரியங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவருவதை பார்க்கையில் நமக்கு பெருமிதம் ஏற்படுகிறது. நமது மேற்கு முனையில் பாகிஸ்தானும் வடக்கு முனையில்  சீனாவும் செய்த அத்துமீறல்களை, நாம் உறுதியாக எதிர்கொண்டுள்ளோம். டோக்லாம் விவகாரம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான ராஜதந்திர நடவடிக்கைகளை நாம் சிறப்பாக கையாண்டுள்ளோம்.  இவை நமது சக்தியை பறைசாற்றும் அதே வேளையில், உலகரங்கில் பெரிய மரியாதையையும்  ஏற்படுத்தியுள்ளது.  விண்வெளி துறையிலும் நமது விஞ்ஞானிகள் வியக்கத்தக்க பல சாதனைகள் புரிந்து நமது அறிவாற்றலை நிரூபித்துள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பு ஏற்பாட்டிலும் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  கட்டமைப்புத் துறை வேகமாக வளர்ந்துள்ளது, குறிப்பாக சாலைப் போக்குவரத்து எல்லை மாநிலமான  அருணாச்சலப் பிரதேசம் வரை பரவியுள்ளது. பெண்கள் முன்னேற்றதிற்காகபெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தையை படிக்க வைப்போம்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.  தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், குடிமக்கள் மத்தியில் கடமையுணர்வு ஏற்பட்டுள்ளது. சிறியதும், பெரியதுமாக பல துறைகளில், சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ள அதே வேளையில், அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நிகழ்வு பற்றியும் சமுதாயத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன. அடுத்து என்ன  நடக்கவேண்டும், என்ன செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் விவாதிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர்நிலை மாற...
உதாரணமாக, எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல்களை முறியடித்ததும், எல்லைக்கு அப்பாலிருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி தருவதும் போன்ற விஷயங்களை மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். ராணுவம் உள்ளிட்ட அனைத்து படைப்பிரிவுகளுக்கும் அவர்களது கடமைகளை செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதிகளின் சட்ட விரோத பண பரிமாற்றத்தை முடக்கியதன் மூலமும் தேச விரோத பயங்கரவாத அமைப்புக்களுடன் அவர்கள் வைத்துள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தியதன் மூலமும், அவர்களின் ஆத்திரமூட்டும் செயல்களும் பரப்புரையும் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த வியூகத்தின் பயன்கள் நன்றாகவே தெரிகின்றன.
இருப்பினும் ஜம்மு, லத்தாக் உட்பட ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும், வளர்ச்சிப்பணிகளை உடனடியாக, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மக்களிடமும் வெளிப்படைத்தன்மையுடன் எடுத்து செல்ல வேண்டியது அவசியம்.  ஹிந்துக்களாக வாழ வேண்டும், பாரத தேசத்தில் வசிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் 1947ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்களூம் 1990களில் தூக்கியெறியப்பட்ட ஹிந்துக்களும் பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக அகதிகள் போல அவலத்தில் உழல்கின்றனர். இந்திய குடிமக்களாக இருந்தும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளான கல்வி, வேலைவாய்ப்பு, ஜனநாயக உரிமைகள் இவை கிடைக்கப்பெறவில்லை, இதற்கு இன்னும் தீர்வுக்காணப்படவில்லை. இவர்களுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுவதற்கு ஜம்மு-காஷ்மீர் மாநில சாசன விதிகளில் உள்ள பாகுபாடுகளே  காரணம்.  இந்த சகோதரர்கள் அடிப்படை உரிமைகளை பெற்று, மற்ற குடிமக்கள் போல சந்தோஷமான, கண்ணியமான, பாதுகாப்பான வாழ்க்கை நடத்தி,  தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றவும், தங்கள் மத, தேசிய அடையாளத்தில் உறுதியாக நிலைத்திடவும், செய்வதற்கான சூழலை நாம் ஏற்படுத்தவேண்டும். இதற்காக அரசியல் சாசனத்தில் பழைய விதிகளை மாற்றி, தேவையான திருத்தங்களை  செய்யவேண்டும்.  அப்பொழுதுதான் ஜம்மு காஷ்மீர் மக்கள்,  மற்ற மாநிலங்களில் உள்ள மக்களுடன் ஒருமுகப்பட்டு,  தேச வளர்ச்சியில் முழு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
எல்லைப் பாதுகாப்பு
இதில் மாநில அரசு, மத்திய அரசு தவிர, சமுதாயமும் பெரும் பங்காற்றவேண்டும்.  எல்லைப்பகுதிகளில் வாழும் மக்கள் தொடர்ச்சியாக எல்லைக்கு அப்பாலிருந்து துப்பாக்கிசூட்டையும், தீவிரவாத  ஊடுருவல்களையும் சந்திக்கின்றனர்.  பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வாழும் பொழுதும், தங்களது தைரியத்தை இழக்காமல், தேச விரோத சக்திகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.  இவர்களுக்கு தேவையான நிவாரணத்தையும் வசதிகளையும்  அரசுடன் இணைந்து,  சமுதாய அமைப்புக்களும் செய்யவேண்டும். இப்பணியில் சங்க ஸ்வயம்சேவகர்கள் ஏற்கனவே இறங்கிவிட்டார்கள்.  இது குறித்து இன்னும் சிந்தனைகள் செய்து,  அரசும் சமுதாயமும் இணைந்து  ஆக்கபூர்வமான வேலைகள் செய்யும்பொழுது, சிறந்த சூழலை அங்கே ஏற்படுத்த  முடியும் . கல்வி, மருத்துவம்  உள்ளிட்ட வசதிகளை  காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் லத்தாக்கிலும் பெருக்குவதுடன், அவர்களின் வாழ்வாதார மேம்பாடு கண்டு, தேசிய சிந்தனை வளர்க்கவும் ஆவன செய்யவேண்டும்.   இந்த லட்சியங்களை அடைய,  அங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி மக்கள் மனங்களில் சரியான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஆக்கபூர்வமான ஒன்றிணைப்பு சாத்தியமாகும். பல ஆண்டுகளாக  திட்டமிட்ட போலி பரப்புரைகள் மூலம் அங்கே பரப்ப்பட்ட தேச விரோதம், கொந்தளிப்பு என்ற விஷத்தை முறிக்க வேண்டுமென்றால், இதுபோன்ற ஆக்கப்பணிகளுக்கு சமுதாயம் முழுதும்  சகஜமாக பரிவு காட்டவேண்டும். தேச விரோத சக்திகளை கடுமையாக ஒடுக்கும் திட்டமிட்ட கொள்கையின் பின்னே முழு சமுதாயமும் ஒருங்கிணைந்து  நின்றால், இப்பிரச்னைகள் அனைத்திற்கும் முழு தீர்வு ஏற்பட வழி பிறக்கும்.
ரோஹிங்கியாக்களின் ஊடுருவல்
தேசவிரோத சக்திகள் கலவரம், பிரிவினைவாதம், வன்முறை, துவேஷம், பகைமை போன்றவற்றை மொழி, பிராந்தியம், இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வட்டார அமைப்புகளின் துணையோடு தூண்டிவிடும் அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக எல்லையோர மாநிலங்களில் அரசியல் சாசன விதிமுறைகளை அவமதிக்கும் சூழல் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வங்காளத்திலும் கேரளாவிலும் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இங்குள்ள மாநில அரசுகள் நிர்வாகத்தை படிப்படியாக அரசியல்மயமாக ஆக்கியுள்ளன. பெரும் தேசிய நெருக்கடியை இந்த மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, குறுகிய அரசியல் ஆதாயத்தின் அடிப்படையில் தேசவிரோத சக்திகளுக்கு உதவி செது வருகின்றன. இந்த தேச விரோத நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளன. மோசமான நடவடிக்கைகளை முறியடிக்க தேவையானவற்றை எல்லாம் மேற்கொள்ள மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. இருப்பினும் எல்லைப் பகுதியில் பசு கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. சட்டவிரோதமாக பங்களாதேஷிலிருந்து ஊடுருவியவர்களின் பிரச்சினையை தேசம் ஏற்கனவே எதிர்கொண்டு வருகிறது. இப்போது மியான்மரில் விரட்டியடிக்கப்பட்ட ரோஹிங்கியாக்கள் சட்டவிரோதமாக பல இடங்களுக்குள் ஊடுருவிவிட்டனர். ரோஹிங்கியாக்கள் வன்முறையாளர்கள், குற்றப்பின்னணி கொண்டவர்கள், பிரிவினைவாதிகள், பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்கள். இதனால்தான் மியான்மரிலிருந்து ரோஹிங்கியாக்கள் துரத்தியடிக்கப்பட்டார்கள். இதை கவனத்தில் கொண்டே அவர்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும். அவர்கள் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலே. அரசும் இதே சிந்தனையைத்தான் கொண்டுள்ளது என்று தோன்றுகிறது. இந்த இக்கட்டான நிலையில் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பின்றி வெற்றி சாத்தியமாகாது. இந்த இலக்கின் அடிப்படையில் இந்த மாநிலங்களில் உள்ள சர்வசக்தியும் துணிச்சலோடு ஒருங்கிணைந்து உறுதியாக செயல்பட வேண்டும். உரத்த குரலை எழுப்ப வேண்டும். அச்சமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். விழிப்போடும் விவரத் தெளிவோடும் இயங்க வேண்டும்.
ராணுவம் - போலீஸ் முக்கியத்துவம்
எல்லையைப் பாதுகாப்பதும் உள் நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் ராணுவம், துணை ராணுவம், போலீஸ் ஆகியவற்றின் பணியே. இவற்றை இந்த அமைப்புகள் ஆற்றலோடும் அர்ப்பணிப்போடும் ஈடுபாட்டோடும் தியாக உணர்வோடும், விடுதலை அடைந்த காலத்திலிருந்து செது வருகின்றன. இவற்றை துரிதப்படுத்தவும் செம்மைப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது. தேவையான உபகரணங்களை வழங்குதல், தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துதல், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், உளவுப் பிரிவின் செயல்பாட்டை பலப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. காவல் பணியில் ஈடுபட்டு அரசுப் பணியில் இருப்பவர்கள், அவர்களது குடும்பத்தினரின் நலனில் அரசு அக்கறை காட்டி வருகிறது. ராணுவ தளவாட உற்பத்தியில் தேசிய தற்சார்பை எட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் காவல் பணி சார்ந்த மனித வளத்தை உயர்த்தவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடனான நேரடி தொடர்பை அரசு இன்னும் மேம்படுத்த வேண்டும். இவையெல்லாம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள். ராணுவ வீரர்கள், காவலர்கள், அவர்களின் குடும்பத்தினரை சமூகம் நேசிக்கவும் மதிக்கவும் செகிறது. தேசிய நலன், உணர்வு சார்ந்த செம்மையான கொள்கைகள், எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றும் திசை சார்ந்த நகர்வுகளே. சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந்த, தகுதி வாந்த, தெளிவான கண்ணோட்டம், தேசிய பெருமிதம் சார்ந்த புரிதல் காணப்படுகிறது. நிர்வாகம், இந்த இயல்புகளை பிரதான கொள்கைகள் வாயிலாக தன்மயமாக்கிக்கொள்ள வேண்டும். இவற்றை செம்மையான முறையில் அமலாக்கத்தக்க மனோபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
இதே முடிவு பொருளாதார முனையிலும் எடுக்கப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க துரித பொருளாதார மேம்பாட்டை கொண்டுவர வேண்டும். இதன் அடிப்படையில் கடைக்கோடியில் உள்ளவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத் திட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு உதாரணமாக ஜன்தன், முத்ரா, எரிவாயு மானியம், வேளாண் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை குறிப்பிடலாம். எனினும் பரந்துபட்ட பாரதத்தின் பல்வேறு தேவைகளையும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த முழுமையான கொள்கையை அமலாக்கவேண்டியது அவசியம். தொழில், வர்த்தகம், வேளாண்மை, சுற்றுச்சூழல் போன்ற அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். பெரிய, நடுத்தர, சிறு தொழில்கள் செவோர் முதல் சிறு வியாபாரிகள், விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலிகள் வரை பல்வேறு தரப்பினரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். தற்போது உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள், தவறானவை, செயற்கையானவை, கானல் நீர் வளர்ச்சி சார்ந்தவை, நன்னெறியை, சுற்றுச்சூழலை, வேலை வாப்பை, தற்சார்பை இவை சேதப்படுத்துகின்றன. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கொள்கைகளும் நிலைப்பாடுகளும் தொடர்பான மறு சிந்தனை சர்வதேச அளவில் தேவை. பாரதத்தைப் பொறுத்தவரை நம் தேசத்தை மையமாகக் கொண்ட பிரத்யேக பொருளாதார வளர்ச்சி முன்மாதிரிகளை உருவாக்க வேண்டும். பழைய பொருளாதார கோட்பாடுகளை உதறித்தள்ளிவிட்டு பாரதியர்களின் பொருளாதார அனுபவங்களை தன்வயப்படுத்திக் கொண்டு அதற்கேற்ப கொள்கைகளை நீதி ஆயோக் உறுப்பினர்களும் பொருளாதார ஆலோசகர்களும் வகுக்க வேண்டும். இந்த கொள்கை வகுப்பு முறை தேசிய லட்சியங்கள், மரபுகள், தேவைகள், வளங்கள் ஆகிய அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தங்கள் அன்றாடத் தேவைகளை பூர்த்திசெய, சுதேசிப் பொருட்களை வாங்குவதில் மக்கள் நாட்டம் காட்ட வேண்டும்.
சாதாரண மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டே அரசின் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். மக்கள் தொழில் முனைவோராக உருவெடுக்கவும் பொருளாதார நடவடிக்கையில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவும் அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். எல்லா துறைகளிலிருந்தும் உண்மையான தகவல்கள் சேகரிக்க வேண்டும். இதன் அடிப்படையில் திட்டங்களை செம்மையாக நிறைவேற்ற வேண்டும். இவற்றின் பயன்கள் கடைக்கோடியில் உள்ளவர்களையும் சென்றடையும் வகையில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும். கடைக்கோடி மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அரசு உண்மையாக அக்கறை கொண்டுள்ளது என்ற நம்பிக்கை திடமாக உள்ளது. துணிச்சலான முடிவுகளை அரசு எடுக்கிறது. சீர்திருத்தங்களை அமலாக்குகிறது. முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் நேர்மையையும் ஒழுக்கத்தையும் அறிவாற்றலையும் தேசம் நம்புகிறது. பல்லாண்டு காலத்திற்குப் பிறகு இத்தகை நல் வாப்பு நமக்கு கிடைத்துள்ளது.
பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தையும் மேம்பாட்டையும் அளவிட மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற அளவுகோல் போதுமானது அல்ல. அது குறைபாடு உடையது என்றபோதிலும் அதையே பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வேலைவாப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும். வாழ்வியல் நிலைத்திட உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் போன்ற அம்சங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நடுத்தர, குறு, சிறு தொழில்கள், கைவினைத் தொழில்கள், சிறு வியாபாரம் சுய வேலைவாப்பு பிரிவு, கூட்டுறவு துறை, வேளாண் துறை, விவசாயம் சார்ந்த இதர துறைகள், பொருளாதாரத்துக்கு நல்கும் பங்களிப்பு அளப்பரியது. சர்வதேச வர்த்தகப் பொருளாதார பூகம்பங்கள் உலுக்கியபோதும் இவை நமது பொருளாதார கவசங்களாக இயங்கின. நமது குடும்ப அமைப்பு முறை இப்போதும் வலுவாக உள்ளது. பெண்கள் வீடுகளிலேயே இருந்தபடி குடும்ப வருமானத்துக்கு உதவக்கூடிய சிறு சிறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது மைய முறை சாரா பொருளாதாரம் என்று குறிப்பிடப்படுகின்றது. இங்கெல்லாம் ஊழல் மிக மிக குறைவு. இத்துறைகளில் கோடிக்கணக்கானோர் வேலைவாப்பு பெற்றுள்ளனர். சமூகத் தளத்தில் அடிநிலையில் இருப்பவர்கள் இப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களே. பொருளாதார முறையை புனரமைக்கும்போது, மாசுகளை அப்புறப்படுத்தும்போது சில நில அதிர்வுகள் ஸ்திரத்தன்மையின்மைகள் தவிர்க்க முடியாதவையே. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இந்த துறைகள் பெரும் பாதிப்புக்கு இலக்காக இடம் கொடுக்கக் கூடாது. புனரமைப்புக்கு பிறகு இந்த துறைகள் பெரும் பலம்பெறும் வகையில் பொருளாதார நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
கடையனுக்கும் கடைத்தேற்றம்
பெரு நிறுவன சமூக பொறுப்பு எனப்படும் சிஎஸ்ஆர் அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்பே, மக்களின் வாழ்வை உயர்த்தும் பணியில் அரசு நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புகளும் பெரு நிறுவனங்களும் ஈடுபட்டு வந்ததற்கு நமது பாரம்பரிய மரபில் ஆழமாக வேரூன்றி உள்ள விழுமியங்களே காரணம். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து செம்மையான திசையை நோக்கி பயணிக்க வேண்டும். கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே நமது பொருளாதார இலக்காக இருக்க வேண்டும். சீரான, நிலையான, துடிப்பான பொருளாதாரம் உலக பொருளியல் நிலையை எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்தப்பட வேண்டும். இது, பொருளாதார உற்பத்தி பரவலாக்கம், வரைமுறையற்ற நுகர்வை கட்டுப்படுத்துதல், வேலை வாப்பை பெருக்குதல், எரிசக்தியை பேணுதல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். தற்போதைய பொருளாதார நிலையிலிருந்து முன்னேறிச் செல்லும்போது இந்த அடிப்படை அம்சத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், நாடோடி பிரிவினர் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் பயனடைய மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த பயன்கள் இவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதில் நிர்வாகம் விழிப்புணர்வுடனும் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளக் கூடிய தன்மையுடனும் செயல்பட வேண்டும். அரசு அமைப்பு இதை துரிதமாக நிறைவேற்ற வேண்டும். சமூகமும் உணர்வார்ந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
விவசாயியின் நிலை பரிதாபம்
பாரதத்தில் தொழில், வியாபாரம், வேளாண்மை ஆகியவை ஒன்றோடொன்று போட்டிபோடக்கூடியவை என்று கருதப்படவில்லை. மாறாக இவை ஒன்றுக்கொன்று அனுசரணையானவை என்று கருதப்படுகிறது. பாரதத்தில் பிரதானமானது வேளாண்மைதான். விவசாயி தனது குடும்பத்துக்கு மட்டும் உணவு அளிக்கவில்லை. தேசத்துக்கே உணவு அளிக்கிறார். ஆனால் இப்போது விவசாயின் நிலை வேதனையாக உள்ளது. வெள்ளத்தாலும் வறட்சியாலும் ஏற்றுமதி இறக்குமதி கொள்கையாலும் விலை வீழ்ச்சியாலும் கடன் உயர்வாலும் பயிர் பாழானதாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். புதிய தலைமுறையினர் நகரத்தில் கல்வி கற்றிருந்தும் வேலை வாப்பு இன்றி அவதிப்படுகின்றனர். படிப்பறிவு இன்றி கிராமங்களில் உள்ளோர் வயல்களில் பாடுபடுகின்றனர்.  இரு தரப்பினருமே அதிருப்தியில் உள்ளனர். கிராமங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. நகரங்களின் மீது சுமை அழுத்துகிறது. வளர்ச்சியினால் ஏற்படும் நெருக்கடி ஒருசேர நகரத்தையும் கிராமத்தையும் பாதிக்கிறது. இதனால் நகரங்களில் குற்றங்கள் அதிகரிக்கின்றன.
பயிர் காப்பீடு போன்ற மகத்தான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மண் பரிசோதனை, வேளாண் பொருட்களுக்கான இணைய வழி சந்தை, போன்றவை சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள கச்சிதமான நடவடிக்கைகள். எனினும் இந்த திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைகின்றனவா? என்பதை உறுதிப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி, அரசுகளின் நல்லெண்ணத்தையும் விவசாயிகள் மீது அரசுகளுக்கு அக்கறை இருக்கிறது என்பதையும் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்த தற்காலிக நடவடிக்கைகள், விவசாய பிரச்சினைக்குத் தீர்வாகாது. புதிய தொழில்நுட்பமும் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத பாரம்பரிய முறையும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இவ்வாறு செவதன் மூலம் விவசாயத்துக்கு அதிக முதலீடு தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும். கடன் வலையில் விவசாயி சிக்கிக்கொள்வதை தடுக்க முடியும். நெடுங்கால அடிப்படையில் மோசமான விளைவுகள் மண்ணுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ, மனிதர்களுக்கோ ஏற்படாது என்பதை பரீட்சார்த்த முறையில் சோதித்துப் பார்த்த பிறகே புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். விவசாயிகளின் மூலதன செலவோடு சேர்த்து ஆதாயமும் இருக்கும் வகையில் விலை நிர்ணயம் செயப்பட வேண்டும். இவ்வாறு செதால்தான் விவசாயி தனது குடும்ப செலவை செய முடியும். அதுமட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு விவசாயத்துக்கு சிறிது தொகையையும் சேமிக்க முடியும். ஆதார விலை அடிப்படையில் வேளாண் விளை பொருட்கள் கொள்முதல் செயப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மை, கலப்பு பண்ணையம், மாடு உள்ளிட்ட கால்நடை சார்ந்த ஒருங்கிணைந்த வேளாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். நமது உணவையும் தண்ணீரையும் மண்ணையும் நஞ்சாக்குவதுடன் விவசாயிகளின் செலவையும் அதிகப்படுத்தும் ரசாயன விவசாயத்தை படிப்படியாகக் களைய வேண்டும்.
பசுப் பாதுகாப்பு
சோற்ப முதலீட்டில் விவசாயம், அதுவும் இயற்கை விவசாயம் என்கிற பேச்சு வரும்போது, நமது நாட்டில் ஏராளமான விவசாயிகள் சிறிய அளவு நிலமே உடையவர்கள், பாசன வசதியும் கிடையாது என்று சுட்டிக்காட்டப் படுகிறது. அந்த வகை விவசாயிகளுக்கு பசு ஆதாரத்திலான விவசாயம்தான், செலவு பிடிக்காத மிக சுலபமான தீர்வு. எனவேதான் சங்க ஸ்வயம்சேவகர்களும் அனைத்து சமயப் பிரிவுகளின் துறவிகளும் பல்வேறு தன்னார்வத்  தொண்டு அமைப்புகளும் தனியாரும் பசுப் பாதுகாப்பு, பசுவின அபிவிருத்திப் பணிகளில் முனைந்திருக்கிறார்கள். நமது பண்பாட்டில் பசுப் பாதுகாப்பு போற்றுதலுக்குரிய செயல். பாரத அரசியல் சாஸனத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. பல மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் அரசுகள் பல காலகட்டங்களில் இது குறித்து சட்டங்களும் இயற்றியுள்ளன. பாரதிய பசுக்களின் பாலில் A2 ஊட்டச் சத்து இருப்பதை அறிவியல் அறிவித்ததை அடுத்து பாரதப் பசு இனத்தின் அருமை புரியத் தொடங்கியுள்ளது. பசுஞ்சாணம், பசுவின் சிறுநீர் இவற்றின் மருத்துவ குணம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உதவுகிறது. இவற்றிலிருந்து தயராகும் உரமும் பூச்சி விரட்டியும் பக்க விளைவு ஏற்படுத்தாமல், மண்ணின் வீரியத்தை அதிகரிக்கும் என்பதால் விவசாயத்திற்கு உறுதுணை. இந்த திசையில் பல ஆவுகளும் நடக்கின்றன. எல்லா மாநிலங்களிலும், குறிப்பாக வங்க தேச எல்லையில், கடுமையான பிரச்சினை ஆகியுள்ளது.
நிலைமை இப்படியிருக்க பசுப் பாதுகாப்பும், பசுவின அபிவிருத்தியும் கூடுதல் மதிப்புள்ள பணிகள் ஆகின்றன. செயல்வீரர்கள் இந்தப் பணிகளை சட்டம், சாஸனம் இவற்றுக்கு உட்பட்டே நடத்துகிறார்கள். சமீபகால வன்முறைகள், அட்டூழியங்கள் குறித்து விசாரணை செய்ததில் இந்தப் பணிகளோ, செயல் வீரர்களோ அந்த வன்முறைச் செயல்களில் ஈடுபடவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியவந்தது. மாறாக பசுப்பாதுகாப்பில் அமைதிகரமாக ஈடுபட்ட பல செயல்வீரர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து விவாதம் நடப்பதுமில்லை. விசாரணையும் இல்லை. பசுப்பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களையோ, பசுப்பாதுகாப்புப் பணியையோ வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவது அநியாயம்; அது விவரம் தெரியாமல் அல்லது உண்மையைப் புறந்தள்ளி செய்யும் செயல். பசுப்பாதுகாப்புப் பணியில் பசுவின அபிவிருத்திப் பணியில் முஸ்லிம் மதத்தவர்கள் பலரும் ஈடுபட்டிருக்கிறார்கள்; கோசாலைகள் நடத்துகிறார்கள். அவர்கள் என்னிடம், பசுப்பாதுகாப்பை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் கீழ்த்தரமான பரப்புரை பல்வேறு மதத்தினரிடையே அனாவசிய டென்ஷன் ஏற்படுத்துகிறது என்று கூறினார்கள். நிலைமை இப்படியிருக்க, பக்தியோடு பசுப்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறவர்கள் அரசில் உயர்நிலையில் உள்ளவர்கள் நல்லெண்ணத்துடன் வெளியிடும் அறிக்கைகள், உச்சநீதிமன்றம் வெளியிடும் கருத்துக்கள் ஆகியவை குறித்து கவலைப்படவும் கூடாது, நிலைத்தடுமாறவும் கூடாது. கிரிமினல்களும், வன்முறையில் இறங்குவோரும்தான் அவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும். இத்தகைய அறிக்கைகளை சுயலாப வேட்டைக்காரர்கள் திரித்தும் பொருள் கூறி பொதுமக்களின் கருத்தை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். இந்த திரித்துப் பொருள் கூறும் வேலையிலிருந்து அரசும் நிர்வாகமும் விலகியிருக்க வேண்டும்; கிரிமினல்கள் தண்டிக்கப்படுமாறும் நிரபராதிகள் தொல்லைக்கு உள்ளாக்கப்படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டபூர்வமான, நற்பணியான பசுப்பாதுகாப்பும் பசுவின அபிவிருத்தியும் மக்கள் நன்மைக்காக தொடர்ந்து நடைபெறும்; இனி அதிகரிக்கும். தற்போதுள்ள நிலவரத்திற்கு சரியான தீர்வும் அதுவே.
தண்ணீர் முக்கியத்துவம்
நல்லபடியாக விவசாயம் செய்ய பாசன ஏற்பாடு மிக முக்கியமான இன்னொரு தேவை. ஆண்டுதோறும் நமக்குக் கிடைக்கும் தண்ணீர் முழுவதையும் அறிவியல் பூர்வமாக நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து நாம் விரிவாக சிந்தனை செய்ய வேண்டும். விவசாயம் நடக்கும் இடங்களில், அரசு தண்ணீர் சேமிப்பு, தண்ணீர் பாதுகாப்பு, நதிகளை சுத்தச் செய்தல், நதி நீரின் தடையற்ற பிரவாகம், புத்துயிர் தரும் திட்டங்கள், மரம் நடுதல் இவற்றுக்காக ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
சமுதாய அளவில் அரசு சாரா, திறன்மிக்க பல தண்ணீர் நிர்வாக நிகழ்வுகளை பலர் நடத்துகிறார்கள். ‘நதிகளைக் காப்போம், பாரதம் காப்போம்போன்ற இயக்கங்களில் தண்ணீரை வனங்கள், மரங்களுடன் தொடர்பு படுத்துகிறார்கள். சில காடு சார்ந்த ஊர்களில் அங்கீகரிக்கப்பட்ட காடுவாழ் மக்களுக்குக் காட்டைப் பாதுகாக்கும் பராமரிக்கும் பொறுப்பு அளிப்பதில் கணிசமான முன்னேற்றம் தெரிகிறது. இது ஆக்கபூர்வமான அறிகுறி. இந்த நடவடிக்கைகள் எல்லாம் கூட்டாக விவசாயத்திலும் சுற்றுச் சூழலிலும் புதியவளமான முன்மாதிரியைக் கொணரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தேசியக் கல்வி கொள்கை
தேசிய புனரெழுச்சியில் அரசாங்க, நிர்வாக முயற்சிகளை விட சமுதாயத்தின் ஒருமித்த முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. காலனி ஆட்சியின் போது கல்வியில், பாடத்திட்டத்தில், நிர்வாகத்தில் பல நாசகரமான மாற்றங்களை அன்னிய ஆட்சியாளர்கள் கொணர்ந்தார்கள். அதன் முக்கிய குறிக்கோள் பாரத மக்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவதுதான். அந்த பாதிப்புகளிலிருந்து கல்வி விடுபடவேண்டும். தொலைதூர காடுகளிலும் குக்கிராமங்களிலும் வசிக்கும் சிறார்களுக்கும் இளையோருக்கும் கைக்கெட்டுவதாக, செலவு பிடிக்காததாக கல்வி அமையும்படி புதிய கல்விக்கொள்கை வகுக்கப்பட வேண்டும். எந்த ஒருஇஸமும்இல்லாததாக பாடத்திட்டம் அமைய வேண்டும். சத்தியத் தேடலை ஊட்டி வளர்த்து நமது தேசியம் பற்றியும் தேசியப் பெருமிதம் பற்றியும் புரிந்துகொள்ளும் திறன் அளிக்க வேண்டும். தன்னம்பிக்கை, திறன்மேம்பாட்டில் ஆர்வம், அறிவு, ஆழ்ந்து முனைதல் இவற்றை ஒவ்வொரு மாணவனிடமும் ஏற்படுத்தும் பாடதிட்டம் தேவை; கூடவே அவரிடம் நல்லொழுக்கம், மரியாதை, பரிவுணர்வு, விவேகம், பொறுப்புணர்வு உள்ளிட்ட பண்புகளையும் பதியச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் நடந்து காட்டி வழிகாட்ட வேண்டும். மாணவர்களோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.கல்வி வளாக சூழலும் இதற்கு உகந்த வகையில் அமைய வேண்டும். சரியான கட்டமைப்பு தேவை; கூடவே நூலகம், பரிசோதனைச் சாலை ஆகியவையும் இருக்க வேண்டும். கல்வி வணிகமயமாவதைத் தடுக்க, அரசுப் பள்ளிகள் கல்லூரிகள் குறைந்தபட்ச தரம் உள்ளவையாக நடத்தப்பட வேண்டும். சமுதாயத்தில் பல பரிசோதனைகள் நடக்கின்றன; அவற்றையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு முறையான வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். இதை நான் மீண்டும் வலியுறுத்துவது ஏன்? கல்வி அமைப்பை முற்றாக மாற்றும் கல்விக்கொள்கை நீண்ட எதிர்பார்ப்பிற்கும் பிறகு விரைவில் தேசத்தின் முன் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையால் தான்.
கற்றுக்கொள்வது என்பது பள்ளியில் மட்டும்தானா, என்ன? நமது வீட்டிலுள்ளவர்கள், பெற்றோர், மற்ற முதியவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசும் பேச்சு, செய்யும் செயல் இவற்றிலிருந்து நேர்மை, நியாயம், பரிவும் இரக்கமும் நிறைந்த பழகுமுறை என பலவித படிப்பினைகள் பெறுகிறோமல்லவா? சமுதாயத்தில் நாம் நடத்தும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், இயக்கங்கள் போன்றவற்றால் நமது மனதும் சிந்தனையும் பண்படுத்தப்படுகிறதா, இல்லையா? ஊடகம், குறிப்பாக இண்டர்நெட் ஊடகம் நம் சிந்தனையிலும் செயலிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறதா, இல்லையா? ‘நீலத் திமிங்கிலம்’ (ப்ளூ வேல்) என்ற விளையாட்டு இதற்கு மிகச் சரியான உதாரணம். நமது குழந்தைகளை இந்த விஷச் சூழலிலிருந்து காப்பாற்ற குடும்பம், சமுதாயம், அரசு அனைத்தும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போதெல்லாம் சிறுசிறு காரணங்களுக்காக வீதிக்கு வருவதும் மக்கள் வன்முறையில் இறங்குவதும் சட்டத்தையும் சாஸனத்தையும் மதிக்காமல் கடமை மறந்து தாறுமாறாக நடந்துகொள்வதும் தென்படுகிறது; நம்பிக்கையை, நல்லிணக்கத்தை, அமைதியை சீர்குலைக்கிற சமூக விரோத கிரிமினல் சக்திகளும் இந்த நிலவரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதெல்லாமே அறநெறிப் பண்பு சிதைவதன் நேரடி விளைவு. ஊரில் பொறுப்புணர்வு அற்றுப்போனதால் ஒரு கிளர்ச்சி என்று வரும்போது அதை மையமிட்டு சுயலாப அரசியல் நடப்பதும் காரணம்.
குடும்ப அமைப்பு
புதிய தலைமுறைக்கு பண்பார்ந்த தனிநபர் - சமுதாய ஒழுக்கத்தையும் குடும்பம், சமுதாயம் ஆகியவை கற்பிக்க வேண்டும். சுரண்டல், ஏற்றத்தாழ்வு, பரிவற்ற போக்கு ஆகிய சமுதாயத் தீமைகளால் முளைக்கும் கிளர்ச்சி, வேற்றுமை இவைகளை வைத்து அரசியல் சுயலாப அரசியல் கொழுக்கிறது. நல்லிணக்கம் இல்லாமல் போனதன் நேரடி விளைவு இது. சங்க ஸ்வயம்சேவகர்களுடன் பல அமைப்புகளும் தனியாரும் சமுதாய நல்லிணக்கம் காண அரும்பாடு பட்டு வருகிறார்கள். ஆனால் முழு சமுதாயமும் தீமைகளைக் கைவிட்டு சமரச நடத்தையை கைக்கொண்டால் தான் வெற்றி கிடைக்கும். நாம் அனைவரும் நமது வாழ்வை செம்மைப்படுத்திக்கொண்டு இதில் ஈடுபட வேண்டும்.
சமீப காலமாக குடும்ப அமைப்பு சிதைவது பற்றிய கவலை தரும் சம்பவங்கள் தென்-படுகின்றன. குடும்பத்திலும் ஊரிலும் ஒழுக்க சிதைவு ஏற்பட்டதால்தான் இப்படி நடக்கிறது. எனவே நாம் குடும்பத்திலும், ஊரிலும் ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுதந்திரமான, வளரும் வேட்கையுள்ள ஒரு நாட்டில் வாழ்வின் எல்லா அங்கங்களும் தேசிய உணர்வை பிரதிபலிக்கின்றன. இது குறித்து சகோதரி நிவேதிதை கூறுகிறார்:
குடும்பத்தின் சக்தி சமுதாயம். வீடு தான் வாழ்வின் ஆதாரம். அதுதான் தேசியவாழ்வை பராமரிக்கிறது. மானுடத்தின் சூத்திரம் இதுதான். இந்த நான்கின் சாரமும் தொன்மையான நமது தர்மத்தில் உள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் உறங்கச் செய்துவிட்டோம். நம்மிடம் உள்ள பொக்கிஷத்தின் அருமையை நாம் மீண்டும் உணர்ந்துகொள்ள வேண்டும்."
ஆக, இன்று அரசு பாரதியப் பண்புகளின் அடிப்படையில் கொள்கை வகுத்துக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அது போல ஒருங்கிணைந்த, தரம் வாய்ந்த கட்டுப்பாடான விதத்தில் சமுதாயம் முன்னேறுவதும் முக்கியம். அரசு நிர்வாகமும் அரசுக் கொள்கைகளை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும், பழுதில்லாமலும் அமல்படுத்த வேண்டும்.
புதிய யுகத்திற்கு ஏற்ப சிரஞ்சீவியான பாரதம் புதிய அவதாரமெடுக்கிறது. பல்வேறு துறைகளில் செயல்படும் நல்லோர் அதை வரவேற்க ஆயத்தமாகிறார்கள். சமுதாயத்தை ஆயத்தப்படுத்துவது தான் அடுத்த தேவை.
ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925 முதல் இந்தப் பணியில்தான் முனைந்துள்ளது. 93வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் சங்கம், நமது ராஷ்ட்ரம் குறித்த தெளிவான புரிதல் கொண்ட கார்யகர்த்தா (செயல்வீரர்)களின் நாடுதழுவிய பெருந்திரள் ஒன்றை உருவாக்க முயன்று வருகிறது. அந்த செயல்வீரர்கள் தங்களின் அந்த புரிதலை அஞ்சாமல் தெளிவாக பிரகடனம் செய்யக்கூடியவர்கள்; இந்த பெருந்திரளான குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் அன்பும் பரிவும் உள்ளவர்கள். நமது மூதாதையரின் தைரியமும் தியாகமும் அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு, பாரதத்தை புகழின் சிகரத்திற்குக் கொண்டு செல்வது ஒன்றே லட்சியம். சங்கப்பணி தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தேசத்தின் அனைத்துத் துறைகளிலும் ஸ்வயம்சேவகர்கள் செயல்பட்டு, அங்கெல்லாம் பண்பார்ந்த சூழல் உருவாக்கி வருகிறார்கள். சுமார் ஒரு லட்சத்து 70,000க்கும் அதிகமான தொண்டுப் பணி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த முயற்சிகளால் சமுதாயத்தில் பண்பார்ந்த சூழல் உருவாக்குவதே சமுதாய ஒருங்கிணைப்புப் பணி. இதில் தோள் கொடுக்க வாரீர்.

Post a Comment

1 Comments