21-6-2013
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
மழை வெள்ளத்தில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு
உயிரிழந்தவர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்திக்கிறோம்.
உத்திராகண்ட், இமாச்சல் மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பல்லாயிரக்கணக்கானவர்கள் பரிதவிக்கின்றனர். சில ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த வெள்ள நிவாரணப்பணியில் காவல்துறை, இராணுவத்தோடு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் பெரும் பணி ஆற்றி வருகின்றனர்.
சுமார் 30 ஆண்டுகளில் கண்டிராத அளவிற்கு மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. அதன் காரணமாக அங்கு புனித யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கானோரும், அங்கு வாழும் பல கோடி மக்களும் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட புனித இடங்கள் மீண்டும் சரி செய்ய ஒரிரு ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் பணியில் பாரதம் முழுவதும் உள்ள மக்கள் இணைந்து பாடுபட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இந்த சேவைப்பணியில் ஆர்.எஸ்.எஸ். இணைத்துக்கொண்டுள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் ஏற்பட்ட சுனாமி பேரழிவை நாம் மறந்திருக்க முடியாது. அத்தகையதொரு பெரும் பாதிப்பு வட பாரதத்தில் மலைவாழ் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்த பேரழிவில் சிக்கி காலமானவர்களின் ஆன்மா நற்கதியடை ஆலயம் தோறும் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்திக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்த பாரதம் ஓர் உடலாகும். கால்களில் வலி ஏற்பட்டால் கண்கள் நீர் சொரிவது போல, இந்த நாட்டில் எந்தவொரு பகுதியில் இன்னல் ஏற்பட்டாலும், அந்தத் துயரைத் துடைக்க கோடிக்கணக்கான கரங்கள் உயரட்டும். அங்கு நடந்துவரும் மீட்புப் பணிக்கும், புணர் நிர்மாணப் பணிக்கும் தமிழக மக்கள் தாராளமாக நன்கொடை அளித்து உதவிடவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தமிழக முதல்வரின் உடனடி செயல்பாடு.
இந்து முன்னணி பாராட்டுகிறது..
தமிழகத்தில் காய்கறி விலை ஏற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உடனடி தீர்வை செயல்படுத்தியுள்ளார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கவும், விவசாயிகள் நேரடியாக பயன்பெறவும் திட்டத்தைத் துவக்கியுள்ளார். இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
அதுபோல் வட மாநிலத்தில் புனித யாத்திரை சென்ற தமிழ பக்தர்களை மீட்டுக்கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். தாய் உள்ளத்தோடு உடன் நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு இந்து முன்னணி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
0 Comments