இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
தமிழ்த்தாய் சிலை அமைக்கும் தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம்..
பாரத தேசத்தின் தலைசிறந்ததும், உலகின் ஆதி மொழிகளில் ஒன்றானதுமான தமிழின் பெருமையை உலகோர் அறியும் வண்ணம் பிரம்மாண்டமான தமிழ்த்தாய்க்குச் சிலை அமைக்கவும், ஐந்து வகை நிலங்களை விளக்கும் பூங்கா அமைக்கவும் தமிழக முதல்வர் நேற்று சட்டசபையில் அறிவித்துள்ளது வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வாகும்.தமிழக முதல்வரின் இந்த நல்முயற்சியை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது, வரவேற்கிறது.
அதுபோல சுதந்திரபோராட்டத் தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் வாழ்நாள் கனவான பாரத மாதாவிற்கு ஆலயம் அமைக்க பாப்பாரப்பட்டியில் நிலம் வாங்கி எடுத்த முயற்சி பல ஆண்டுகளாக நிற்கிறது. அந்த நிலங்கள் தற்போது சிலர் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் அறிகிறோம். அவற்றை மீட்டு, மேலும் அதற்கு தேவையான இடத்தினை கொடுத்தும், பாரதமாதா கோயில் அமைக்க தமிழக முதல்வர் அவர்கள் உதவிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இதற்குரிய செலவினை பாரதமாதாவின் பக்தர்களும், தியாகி சுப்பரமணிய சிவா மேல் அன்பு கொண்ட தொண்டர்களும் ஏற்பார்கள். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் உற்ற நண்பரும், ஆங்கிலேயனின் கொடுஞ்சிறை வாசத்தால் தொழுநோய் பிடிக்கப்பட்டு அவதிபட்டவருமான சுப்ரமணிய சிவா அவர்களின் தீராத தேச பக்தி கனலை. தியாகத்தை தமிழக இளைஞர்கள் அறியும் வண்ணம் இத்திருக்கோயில் அமைந்திட தமிழக முதல்வர் ஆவண செய்வார் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறோம்.
அறநிலையத்துறை அறிவிப்பு..
தமிழக அரசு பூஜாரிகள், திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் உயர்த்தியுள்ளதை வரவேற்கிறோம். தமிழக இந்து சமய அறநிலையத்துறை தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பகுதிகளில் உள்ள ஆலயங்களை புனர்நிர்மாணம் செய்ய நிதி உதவி செய்வதை வரவேற்கிறோம். அதுபோல அறநிலையத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான கோயில்கள் கேட்பாரற்று கிடக்கின்றன, அவற்றை முறையாக பராமரிக்கவும்,குறிப்பிட்ட காலத்தில் கும்பாபிஷேகம் செய்யவும் வேண்டும். ஆலயங்கள் ஆன்மிக கேந்திரங்கள், வரலாற்று பொக்கிஷங்கள் அவற்றை பாதுகாக்க அறநிலையத்துறை வேகமான நடவடிக்கைகளைத் துவக்க வேண்டும். திருக்கோயில்களில் உள்ள இறைவன் திருமேனிகள் அந்தந்த கோயில்களில் வைத்தே பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைவன் திருமேனிகள் வழிபாட்டுக்குரியவை, அவை காட்சி பொருட்கள் அல்ல என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
விக்ரவாண்டி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக ராஜேந்திர சோழன் காலத்தில் திருப்பணி செய்த, 1000 ஆண்டு பழமையான மானம்பாடி நாகநாத சுவாமி திருக்கோயில் சிதையும் அபாயம் உள்ளது. அதுபோல நெல்லையில் உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான சிவன் கோயில் ஒன்று ரயில்வே மேம்பாலப்பணியை காரணம் காட்டி இடிக்க இருப்பதாக மக்கள் அஞ்சுகிறார்கள்.ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான திருக்கோயில்கள் இடிப்பது மத்திய அரசு 1991இல் கொண்டுவந்த வழிபாட்டுத்தல பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணானது. மக்களின் உணர்வுகளை மதித்தும்,பழமையானத் திருக்கோயில்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதை கருத்தில் கொண்டும் திருக்கோயில்களுக்கு எத்தகைய சிதைவு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
0 Comments