Press release by Hindu munnani



25-8-2012

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!

அறநிலையத்துறை நிலங்கள் வேறு அரசு துறைக்கு மாற்றக்கூடாது..

 

சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தோடு ஓர் ஒப்பந்தம் மூலம் பங்கு தாரராகி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயச் சொத்துகளில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் நிலங்களை அரசின் வேறு துறைகளுக்கு மாற்றும் நயவஞ்சகத் திட்டத்தின் ஒரு பகுதி இது. இதுபோல் பல அரசுத் துறைகளுக்கு ஆலயச் சொத்துகள் பறிபோயுள்ளன. தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்கவே பல தலைமுறை போராட வேண்டிய நிலையில் யானையின் வாயில் போன கரும்புபோல அரசுத் துறை கபளீகரம் செய்த சொத்துகளை மீட்பது முடியாத காரியம். அதனால் எந்தப் பலனும் ஆலயத்திற்குக் கிடைத்ததில்லை என்பது அனுபவ உண்மை.

ஆலயத்திற்குச் சொத்துகளை எழுதி வைத்த நமது முன்னோர்கள் ஆலய பராமரிப்புக்காகவும், காலகாலமாக ஆலய விழாக்கள் சிறப்பாக நடைபெறவும் ஏற்பாடு செய்தனர். இதுபோன்ற செயல் நிலம் அளித்த பக்தர்களின் நோக்கத்தையே சிதைப்பதாகும். இதுபோன்ற அரசின் அலட்சியப் போக்கைக் கண்டு பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மசூதிகளுடைய வக்ஃப் வாரிய இடங்கள் பல ஆயிரம் கோடிக்கு விரிந்து பரந்து கிடக்கின்றன. அதனையோ, வெள்ளைக்காரர்கள் போனபிறகு அவர்களின் ஆக்கிரமிப்பிலும், சர்ச்களாலும் வளைத்து போடப்பட்டதுமாகிய கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் வீட்டு வசதி வாரியத்திற்கு நிலங்கள் வேண்டுமெனில் ஒரு சிறிதேனும் எடுக்கலாமே? இந்தத் திட்டத்தால் இந்து சமய அறநிலையத்துறைக்கு லாபம் என்றால் வக்ஃ வாரியத்திற்கும், சர்ச்க்கும் அந்த லாபம் கிடைக்கட்டுமே! செய்வார்களா? மாட்டார்கள். கிறிஸ்தவ, முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்ல, தங்கள் மத விஷயங்களிலோ, மதச் சொத்துகளிலோ அரசு தலையிடுவதை எதிர்த்து அவர்கள் தெருவுக்கு வந்து போராடுவார்கள். அரசின் தகிடுதத்தங்களால் பாழாவது இந்து ஆலயச் சொத்துகள், ஆலயங்கள், வழிபாடுகள் தான். இந்து சமயத்திற்கு அடிப்படையாக விளங்கும் கோயில்களைப் பராமரிக்க முன்னோர்கள் எழுதி வைத்த சொத்துகள் சூறையாடப்படுவதைப் பார்த்துக் கொண்டு இந்து முன்னணி சும்மா இருக்காது.

ஏராளமான அசையும், அசையா சொத்துகள் அரசின் அலட்சியத்தால் விழுங்கப்பட்டுவிட்டன. ஆலயங்கள் அரசியல்வாதிகளின் கரைவேட்டி அதிகாரத்திற்கு ஆட்பட்டு சீரழிந்து வருகின்றன. இந்நிலையில் இருக்கும் சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்ள இந்துக்கள் போராட முன் வரவேண்டும்.

எனவே, ஆலயச் சொத்துகளை வீட்டு வசதி வாரியத்தின் வீடு கட்டும் திட்டத்திற்கு அளிப்பதை இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது. ஆலயச் சொத்துகளைச் சரிவர பராமரிப்பதுடன் பக்தர்கள் வசதிக்காகவும், ஆலய, ஆன்மீக விஷயத்திற்கும் ஏற்றார்போலவும் அந்த இடங்கள் பயன்படுத்தப்பட, தெய்வ நம்பிக்கை உள்ள திறமையானவர்கள், இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைத்து தகுந்த ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று இந்து முன்னணி தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.





Post a Comment

0 Comments