சாதாரண பஸ்கள் அதிகம் வேண்டும்: கையெழுத்து இயக்கம் தொடங்கியது
சென்னை, ஜூலை 10: சென்னையில் சாதாரணக் கட்டண பஸ்களை அதிகம் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கான கையெழுத்து இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.சென்னையில் ஒரே தடத்தில் வெவ்வேறு வகையான கட்டணத்தில் பஸ்கள் விடப்பட்டு வருகின்றன. இது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தக் கட்டணம் கொண்ட சாதாரண வகை பஸ்கள் எப்போதாவது ஒருமுறை மட்டுமே வருவதாகவும், மக்கள் அதிகக் கட்டணம் உள்ள பஸ்களில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் எம்.என்.சுந்தர் புகார் கூறியுள்ளார்.கோரிக்கைகள்: சாதாரண பஸ் கட்டணம், எல்.எஸ்.எஸ். பஸ் கட்டணம் மற்றும் ஏ.சி. பஸ் கட்டணம் என அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டண விகிதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லக் கூடிய சாதாரணக் கட்டண பஸ்களை 50 சதவீதத்துக்கும் அதிகமாக இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.கையெழுத்து இயக்கம்: இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பு சார்பில் இந்தக் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது.பஸ் நிலையத்தில் உள்ள சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்தக் கையெழுத்து இயக்கம் குறித்து சுந்தர் கூறுகையில், "கையெழுத்து இயக்கத்துக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த கையெழுத்து இயக்கத்தில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர். மேலும் இந்த வாரத்துக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் கையெழுத்துக்கள் பெறப்படும். அவை போக்குவரத்துத்துறை அமைச்சர் அல்லது போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களிடம் அளிக்கப்படும்' என்றார்.ஆய்வு நடத்தப்படுமா? போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பஸ் நிலையம் தூய்மை பெற்றது.இப்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி அசுத்தமாகக் காட்சி அளிக்கிறது. உடனடியாக அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments