இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுத்த முதல்வரைப் பாராட்டுகிறோம்..
தமிழகத்தின் முக்கிய தேவை தண்ணீரும், மின்சாரமும் ஆகும். இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. அதற்கு ஏற்ப அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து தமிழக முதல்வர் இன்னும் 10 நாளில் வர இருக்கும் வடகிழக்குப் பருவமழையின் நீரைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.
மழைநீர் கால்வாய் சென்னை மாநகரில் ஏற்படுத்தப்பட்டாலும் அது செயலிழந்த நிலையில் இருக்கிறது. அந்தக் கால்வாயில் குப்பைக் கூளங்களும், சாலையில் ஓடும் சாக்கடை நீரும் அதனுள் விடப்பட்டு வருகிறது. மழைநீர் கால்வாய், கொசு உற்பத்தியைப் பெருக்கி வருகிறது. இதில் உள்ள மண், சகதிகளை வெளியேற்ற சென்னை மாநகராட்சி ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் ரூபாய் செலவு செய்தாலும் அது முழு பயனைத் தரவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பெய்யும் மழை நீரில் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடைகிறது. இதற்குக் காரணம் சாலையோரம் இருந்த குளம், ஏரிகளை ஆக்கிரமித்து மூடியுள்ளது தான். மழைநீர் வீடுகளில் விழுவதைவிட சாலையில் தான் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவற்றைச் சேமிக்க நமது முன்னோர்கள் ஏரி, குளங்களை வெட்டி வைத்தார்கள். நெடுநோக்கோடு நீர்நிலைகளை ஏற்படுத்துவது பெரும் புண்ணிய செயல் என வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் இன்றோ கோடிகளுக்கு ஆசைப்பட்ட அரசியல்வாதிகளின் செல்வாக்கால் அவை புறம்போக்கு நிலங்களாக, கட்டிடங்களாக மாறிவிட்டன. மழைநீரை எவ்வளவு வேகமாகக் கடலைச் சென்றடைய வைக்கலாம் என்றே அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். உதாரணமாக வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயத் திருக்குளத்தை முழுவதுமாக மூடி, கடைகள் கட்டிவிட்டார்கள். இந்து முன்னணி பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. அரசு, ஆக்கிரமிப்பைத் தடுக்கத் தவறியது. அதுபோல சென்னை கொளத்தூர் சிவன் கோயில் குளம், ரெட்டேரி முதலானவை ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இந்த அநியாயத்தை அரசும், அதிகாரிகளும் தடுத்து நிறுத்த வேண்டும்.
`மழை நீர் உயிர் நீர்' என்று வாகனங்களில் எழுதினால் மட்டும் போதாது; நமது உள்ளங்களில் உணர்ந்து செயல்பட அரசு முன் மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும்.
முதல்வரின் உத்தரவினை அதிகாரிகள் தீவிரமாகச் செயல்படுத்தி மழைநீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
0 Comments