‘1000 Eye Donors Families’ Meet’ in Chennai


சென்னையில் கண்தானம் செய்த ஆயிரம் குடும்பங்களின் சங்கமம்

சுவாமி விவேகானந்தர் பிறந்த 150ஆவது ஆண்டு விழாக்குழுவின் சார்பில் கண்தானத்துக்காக உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஆயிரம் குடும்பங்களின் சங்கமம், சென்னை மீனாட்சி கல்லூரியில் நவம்பர் 23ஆம் தேதி மாலை நடைபெற்றது.

பிரபல ஹரிகதா சொற்பொழிவாளர் சிந்துஜா சந்திரமௌலி இறை வணக்கம் பாடினார். விஜயபாரதம் தேசிய வார இதழின் ஆசிரியர் ம.வீரபாகு வரவேற்புரையாற்றி, மேடையில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.


சங்கர நேத்ராலயா கண் வங்கி நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் குடும்ப கண்தான திட்டத்தை வலியுறுத்திய அமரர் சிவராம்ஜி ஜோக்லேகருக்கும், அதை செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்வயம்சேவகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மரணம் அடைந்தவர்களின் கண்களை அகற்ற சங்கர நேத்ராலயாவில் உள்ள நவீன வசதிகளை விவரித்த அவர், கண்களை அகற்ற முன்வரும் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னிலை வகித்த மீனாட்சி கல்லூரி செயலாளர் டாக்டர் கே.எஸ்.லக்ஷ்மி, கண்தானம், ரத்ததானம் ஆகியவற்றை வலியுறுத்தி மீனாட்சி கல்லூரியில் செய்யப்படும் முயற்சிகளை விவரித்தார். “சாதாரணமாக இந்த அரங்கத்தை வெளி நபர்களுக்குத் தர எனக்கு மனம் வராது. ஆனால் இந்த நல்ல காரியத்துக்காகக் கேட்டப்போது, உடனே ஒப்புக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.

தி.நகர் ராமகிருஷ்ண ஆசிரமத்தின் இணை செயலாளர் சுவாமி சத்யபிரபானந்தா, “கடவுளின் அனுகிரகம் இருந்தால்தான் தானம் செய்ய முடியும் என்று சுவாமிஜி கூறுவார். தானம் என்றால் பணத்தையோ, பொருளையோ கொடுப்பது மட்டுமல்ல. நல்ல உள்ளம், நல்ல ப்ரார்த்தனை ஆகியவையும் தானம்தான் என்றார். கண்தானம் உள்ளிட்ட பல தானங்களை வலியுறுத்தி அவர் பல்வேறு கதைகள் கூறி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

மேடையின் பின்னணியில் இருந்த படங்கள் மற்றும் சுலோகம் பற்றி ஸம்ஸ்கிருத பாரதி மாநில தலைவர் டாக்டர் ராமசந்திரன் விளக்கினார். அதையடுத்து தங்கள் குடும்பத்தினர் கண்தானம் செய்த அனுபவங்களை மேத்தா நகரைச் சேர்ந்த சிவகாமி விளக்கினார். 


ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சேவா ப்ரமுக் ஸுஹாஸ்ராவ்ஜி தனது வாழ்த்துரையில் பார்வையற்றவர்களுக்கான சங்கத்தின் சேவை காரியங்களை விவரித்தார். சேவை காரியங்கள் செய்வதன் நோக்கம், சேவை பெறுபவர்களிடமும் அந்த மனப்பான்மை வளர வேண்டும் என்பதுதான் என்று தெரிவித்த அவர், “சங்கத்தின் சேவைப்பணிகளில் நாட்டிலேயே டில்லி மாநகரம்தான் முதலிடம் வகிக்கிறது. இது போன்ற பல சேவைப்பணிகள் மூலம் சென்னை முதலிடத்துக்கு வர வேண்டும்” என்று கூறினார்.

ராஷ்ட்ர சேவா பாரதி அமைப்பின் அகில பாரத அமைப்பாளர் சுந்தர லக்ஷ்மணன் தனது வாழ்த்துரையில், “பார்வையற்றவர்களுக்கு முதல் தேவை ஊக்கம்தான். அவர்களை சமுதாயத்தில் அங்கீகரிக்க வேண்டும். பார்வையற்றவர்களுக்காக தேர்வு எழுதுவது உள்ளிட்ட உதவிகளைச் செய்வது அதிகரிக்க வேண்டும். மேலும் கண்தானம் செய்வது மூலமாக அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்” என்று கூறினார்.



தொடக்கத்தில் சுவாமி விவேகனந்தரின் நாட்டிய நாடகம் சென்னை அம்பத்தூர் 'ரமணி மற்றும் குழுவினரால்' இனிதே நிறைவேறியது.   





விழா துளிகள்:-
  • ·கடந்த இரண்டு மாதங்களாக “குடும்பத்துடன் கண்தானம் செய்வோம்” என்று உறுதிமொழியை வலியுறுத்தி தொடர்பு செய்யப்பட்டன
  • ·படிவங்களில் சென்னை மாநகரமெங்கும் 3000 குடும்பங்கள் கையெழுத்திட்டன. இவற்றில் கையொப்பம் இடப்பட்ட 1000 பாரங்களை டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்திடம் சுவாமி விவேகானந்தர் 150ஆவது விழாக்குழு தமிழக அமைப்பாளர் உ.சுந்தர் ஒப்படைத்தார்.
  • ·முப்பது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்காகப் பணியாற்றின.




Post a Comment

1 Comments

  1. Namaste Ji.

    If the details of these events are provided before the event it will help people like us to participate in the event

    ReplyDelete