** இரண்டு வயது மாதவன் ராமரக்ஷா ஸ்தோத்திரத்தின் 35 சுலோகங்களையும் மனப்பாடம் செய்துவிட்டார். “ சிறு வயதில் நான் காலையில் கண்விழித்து எழும்போது தாயிஜி (அம்மா) ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே சமையல் செய்வதை பார்த்திருக்கிறேன்” என்று நினைவு கூர்வார் ஸ்ரீ குருஜி. அந்த காட்சியும் ஒலியும் என் மனதில் நல்ல நல்ல எண்ணங்களை விதைத்தன” என்பார் அவர்.
** நாகபுரி பள்ளி மாணவனான மாதவனுக்கு மல்ல கம்ப பயிற்சியில் ஆர்வம் அபரிமிதமாக இருந்தது. பள்ளி நேரம் முடிந்து பல மணி ஆகியும் மாதவனைக் காணோமே என்று தாயிஜி தேடிக் கொண்டு வந்தார். மல்ல கம்ப பயிற்சியில் ஒரு பாடத்தை சரிவர செய்ய முடிகிற வரையில் பள்ளியிலிருந்து புறப்படப் போவதில்லை என்பதல்லவா அன்று மாதவன் செய்திருந்த தீர்மானம்!
** விலங்கியலில் பட்டமேற்படிப்பு முடித்து காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இளைஞர் மாதவராவ் பணிபுரிய தொடங்கினார் வகுப்பறையில் பாடம் சொல்வதோடு நின்று விடாமல் எல்லாத் துறை மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கமளித்து அனைவர் அன்பையும் சம்பாதித்தார்; மாணவர்கள் அவரை குருஜி என்று அன்புடன் அழைக்கத் தொடங்கினார்கள்.
** இளைஞரான குருஜிக்கு தவம் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. விவேகானந்தரின் சகோதரத் துறவியான அகண்டானந்தர் தேசப் பணியில் ஈடுபடுமாறு இவரை பணித்த போது அதை சிரமேற்கொண்டு தன் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்துக் கொண்டார் அந்த இளைஞர்.
** ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் வழிகாட்ட தேசத்திற்காக அர்ப்பணித்த குருஜியின் வாழ்க்கையில் இரண்டு சாதனைகள்: ஒன்று, நாடு தழுவிய நல்ல கட்டமைப்பு உள்ள ஹிந்து சமுதாயம் உருவாக்க இயக்கக் கட்டமைப்பு. இரண்டு, கொடூரமான தேசப்பிரிவினை காலகட்டத்தில் அரசியல் தலைமை ஹிந்துக்களை நட்டாற்றில் விட்ட போது ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது என்று ஹிந்து சமுதாயத்தை உணரச் செய்தது.
** “ஆதிகாலம் தொட்டு உள்ள ஹிந்து மதத்தில் தீண்டாமை கிடையாது, இடைக்காலத்தில் ஹிந்து சமுதாயத்தில்தான் தீண்டாமைக் கொடுமை புகுந்தது, அதை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் நீக்குவோம்” என்று ஹிந்து சமய ஆச்சாரியர்கள் பிரகடனம் செய்யும் சூழ்நிலை ஏற்படுத்த சங்கம் செய்த முயற்சியில் ஈட்டி முனையாக இயங்கினார் ஸ்ரீ குருஜி. விளைவாக ’ஹிந்து மதம் தீண்டாமை உள்ள மதம்’ என்று பேசி பட்டியல் சமூக ஹிந்துக்களை மதம் மாற்ற நடந்த.சூழ்ச்சியின் முனை மழுங்கியது.
** பாம்புக்குப் பால் வார்ப்பது போல் காஷ்மீரில் தேசவிரோத கும்பல்களை வளர்த்துவிட்ட அன்னாள் அரசியலால் பாரதத்தின் கலாச்சார மணிமகுடமான காஷ்மீரை நாம் இழந்து விடுவோமோ என்ற நிலையில் சங்க பலம், தனது அன்புள்ளம் இரண்டாலும் ஸ்ரீ குருஜி காஷ்மீரை பாரதத்துடன் இணைப்பதில் வெற்றி பெற்றார்.
** பாகிஸ்தான் பாரதத்துடன் சண்டைக்கு வந்த வேளையில் 1965 ல் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போர் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றார்கள். பிரதமரின் அழைப்பின் பேரில் ஸ்ரீ குருஜியும் கலந்து கொண்டார். கூட்டத்தில் கம்யூனிஸ்டு ஒருவர் மீண்டும் மீண்டும் உங்கள் ராணுவம் உங்கள் ராணுவம் என்று பேசினார். “நமது ராணுவம் என்று சொல்லுங்கள்” என்று ஸ்ரீ குருஜி அவரைத் திருத்தினார். தேசம் நமது தேசம் என்ற உணர்வு எப்போதும் மக்கள் மனதில் பதிந்திருக்க வேண்டும் என்பது ஸ்ரீ குருஜியின் கருத்து.
** தேசம் ஒரே தேசம் என்பது பாரத மக்கள் அனைவரின் மனதிலும் ஆழப் பதிந்த விஷயம். இந்த தேசத்தில் ஒரு கவிஞன் கதாநாயகனை வர்ணனை செய்ய வேண்டும் என்றாலும் ஒரே தேசம் என்ற கருத்து மனதில் பதியும்படி பாட்டு இயற்றுகிறான். வால்மீகி அப்படித்தான் ராமபிரானை வர்ணனை செய்கிறார்.” ஸமுத்ர இவ காம்பீர்யே, தைர்யேண ஹிமவான் இவ” ( ராமபிரானின் அறிவாற்றல் கடல்போல் ஆழமானது; அவரது திட சித்தம் இமயம்போல் வலிமை கொண்டது). “ஆ சேது ஹிமாசலம்” என்பது தானே ஹிந்துஸ்தானத்தின் வியாபகத்தை காட்டும் முதுமொழி!
** பாரத பாகிஸ்தான் யுத்தத்தில் ஒரு போர் முனையில் நமது பஞ்சாபின் கரும்புக் காட்டுக்குள் பாகிஸ்தானி பாரா ட்ரூப்பர்கள் தரையிறங்கும் சம்பவங்கள் நடந்தன. அவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசாக ஒரு தொகை அளிக்கப்படும் என்று அப்போதைய அரசு அறிவித்தது. இது தவறு என்றார் ஸ்ரீ குருஜி. “பிடிபடும் பாரா ட்ரூப்பர் இரண்டு மடங்கு தொகை கொடுத்தால் பிடித்தவர் விட்டு விடமாட்டார் என்பது என்ன நிச்சயம்? தேசத்தை தாக்க வருபவனை பிடித்துக் கொடு. அது உன் தேச பக்திக்கு அடையாளம்” என்றல்லவா அரசு மக்களை ஊக்குவித்திருக்க வேண்டும்?” ஸ்ரீ குருஜி. இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்ந்த தேசிய உணர்வு பாரத மக்களிடம் உண்டு என்பதை சுட்டிக்காட்டினார்.
0 Comments