ராம ஜன்மபூமியில் கோயில் கட்டுமானம் - தேசிய பெருமிதத்தின் சின்னம்

அயோத்தி ராம ஜன்மபூமியில் பிரம்மாண்ட ஆலயம் கட்டுவதில் இருந்த அனைத்து தடைகளையும் நீக்கி மேன்மை தாங்கிய உச்சநீதிமன்றம் அளித்த ஒருமனதான தீர்ப்பு, ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பத்திற்கேற்ப அமைந்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத காரியகாரிணி மண்டல் கருதுகிறது. ராம ஜன்மபூமி விவகாரத்தில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றம், நீதித்துறை வரலாற்றில் நினைவுகூரத்தக்க தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தின் மேன்மை தாங்கிய நீதிபதிகளின் இணையற்ற பொறுமைக்கும் மதிநுட்பத்திற்கும் பல்வேறு தடைகள் வந்த போதும் மிகவும் நடுநிலைமையோடு இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பிற்காக மேன்மை தாங்கிய உச்சநீதிமன்றத்தை அகில பாரத காரியகாரிணி மண்டல் மனதாரப் பாராட்டுகிறது.
ராம ஜன்மஸ்தானுக்கு ஆதரவான ஆதாரங்களையும் விவாதங்களையும் பெரும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பொறுப்புணர்வோடும் அறிவார்ந்த முறையில் முன்வைத்த வழக்கறிஞர்கள், பெரும் பாராட்டுதலுக்குத் தகுதியானவர்கள். சமுதாயத்தின் எந்தவொரு பிரிவினருக்கும் இந்தத் தீர்ப்பானது வெற்றியின் சின்னமாகவோ அல்லது தோல்வியாகவோ கருதப்படாமல், ஒட்டுமொத்த தேசத்தின், நீதித்துறையின், அரசியல் அமைப்பு சட்டத்தின் வெற்றியாக இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது, மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். தீர்ப்பை, முதிர்ச்சியான முறையில் அணுகியதற்காக நாட்டு மக்களுக்கு அகில பாரத காரியகாரிணி மண்டல் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலக வரலாற்றில் நிகழ்ந்த பெரிய அளவிலான, நீடித்த போராட்டங்களில் ‘ஸ்ரீ ராம ஜன்மஸ்தானில் ஆலயம் எழுப்பும் போராட்டம்’ தனித்துவம் வாய்ந்ததாகும். 1528-இல் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான ராம பக்தர்கள் தங்களது இன்னுயிரை அளித்துள்ளனர். சில நேரங்களில் சில மாபெரும் நபர்களின் தலைமையிலும், மற்ற நேரங்களில் தன்னிச்சையாகவும் இந்தப் போராட்டம் தொடந்து நடைபெற்றது. இதற்கான சட்டப் போராட்டம் 1950-இலும், மக்கள் இயக்கம் 1983-இலும் தொடங்கி, இந்த வெற்றிகரமான முடிவு எட்டப்படும் வரை ஓயாமல் நடைபெற்றது. பல்வேறு மாமனிதர்களின் அர்ப்பணிப்பான முயற்சியாலும் ஓயாத பணியினாலும், உலக வரலாற்றின் இந்த மிகப்பெரிய இயக்கமானது, வெற்றியின் இலக்கை எட்டியுள்ளது. இந்தப் போராட்டத்தில் பலிதானமான லட்சக்கணக்கான பலிதானிகளுக்கு அகில பாரத காரியகாரிணி மண்டல் நன்றியுடன் அஞ்சலி செலுத்துகிறது.
தீர்ப்பை வழங்கிய பிறகு, சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நம்பிக்கையைப் பெற்று, தீர்ப்பை மனமார அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பது எந்தவொரு அரசாங்கத்துக்கும் கடினமான செயலாகும். சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் நம்பிக்கையையும் பொறுமையுடனும் வலிமையுடனும் வென்றதற்காக, மத்திய அரசையும் தற்போதைய அரசியல் தலைமையையும் அகில பாரத காரியகாரிணி மண்டல் மனதாரப் பாராட்டுகிறது.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியும், ராம பக்தர்களின் உணர்வுகளின் படியும் ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திரம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதிய அறக்கட்டளையானது, அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் அறக்கட்டளையாக இல்லாமல், சமுதாயத்தால் இயக்கப்படும் அறக்கட்டளையாகத் திகழ வேண்டும். மேலும், அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலித்து, அரசாங்கத்தின் பணியை எளிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் முன்னிலை வகித்த மதிக்கத்தக்க துறவி பெருமக்களின் தலைமையிலும் வழிகாட்டுதல் படியும் கோயில் எழுப்பும் பணியை மேற்கொள்வது என்ற முடிவு பாராட்டத்தக்கதாகும். ராம ஜன்மபூமியில் பிரம்மாண்டமான, புனிதம் வாய்ந்த ஆலயத்தை எழுப்பும் பணியை இந்த துறவி பெருமக்கள் விரைவாக முடிப்பார்கள் என்று அகில பாரத காரியகாரிணி மண்டல் உறுதியாக நம்புகிறது. மேலும், இந்த புனிதமான பணியில் உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்களும், அனைத்து பாரதீயர்களும் பங்கு பெறுவார்கள் என்று நம்புகிறோம்.
இந்தப் புனிதமான ஆலயத்தை எழுப்பும் பணி நிறைவடைவதோடு, கண்ணியம், சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாட்டு உணர்வு, அயோத்தி ஸ்ரீ ராமன் வாழ்ந்து சென்ற உயர் பண்புகள் ஆகியவை சமுதாயத்தில் வளர்ந்து, உலகில் அமைதி, நல்லிணக்கம், நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் பாரதத்தின் பணியும் முழுமையடைவது நிச்சயம்.

Post a Comment

0 Comments