SETU-42

மத்தியப் பிரதேசம்
மின்தடைக் காரணங்கள்: வவ்வால், அணில், அடுத்து...?

போபால், ஜூன் 24
காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகி வருகிறது அரசு வவ்வால்களால் இந்த பிரச்சினை ஏற்படுவதாக சமாளித்தது. மின்கம்பிகளில் வவ்வால்கள் தலைகீழாக தொங்கும், சில சமயம் அவற்றில் மின்சாரம் பாய்ந்து மின்தடை ஏற்படும் என்று அரசு தரப்பில் காரணம் காட்டப்பட்டது. இதையடுத்து அரசும் மின் துறையும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக, முதலமைச்சர் கமல் நாத் அரசுக்கு எடுத்துக் கூறியது. உடனே மின்சார அமைச்சர் பிரியவிரத சிங் மின்மாற்றிகளில் ஓவர் லோடு ஆவதால்தான் பிரச்சினை, வவ்வால்களால் அல்ல என்று புது காரணம் கூறினார். வவ்வாலைக் காரணம் காட்டிய அதிகாரியை குறை கூறினார். ஆனால் சில இடங்களில் அணிலால் பிரச்சினை ஏற்படுவதாக அமைச்சரே கூறி பிரச்சினையை மேலும் குழப்பினார். மத்தியப் பிரதேச மக்களுக்கு மின் தடையில் இருந்து கூடிய சீக்கிரம் விடுதலை கிடைக்கும் என்று தோன்றவில்லை.
---------------------------

அஸாம்
வைக்கிற ஐஸில் யானைக்கு சளி பிடிக்கலாம்!

குவாஹாட்டி, ஜூன் 24

குஜராத் தலைநகர் ஆமதாபாதில் ஜூலை 4 அன்று ஜகந்நாத் ரதயாத்திரை நடைபெற உள்ளது. அந்த ஊர்வலத்திற்காக அசாமிலிருந்து குத்தகை அடிப்படையில் யானைகள் கொண்டுவர விழா ஏற்பாட்டாளர்கள் அசாம் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். அனுப்புவதாக அசாம் பாஜக அரசு கூறியதும் பிராணிநல ஆர்வலர்கள் என்று சிலர் எதிர்ப்புக் கிளப்பினார்கள். உடனே அசாம் எதிர்க் கட்சியான காங்கிரசும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளும் யானை அனுப்புவதை எதிர்த்து அறிக்கைப் போர் தொடங்கினார்கள். சரக்கு ரயிலில் கொண்டு போகப்படும் யானை உஷ்ணத்தைத் தாக்குப் பிடிக்குமா என்று யானை மீது பாசம் பொழிந்தார்கள். கடந்த சில ஆண்டுகளில் 40 யானைகள் குத்தகை அடிப்படையில் வெளியே கொண்டுபோகப் பட்டிருக்கின்றன. அப்போது வாய் திறவாத இவர்கள் இன்று கொந்தளிப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஒரு ஹிந்து உற்சவத்திற்காக அல்லவா குஜராத்திலிருந்து யானை கேட்கிறார்கள்! யானையை அனுப்ப விடலாமா? மதசார்பின்மையின் கதி என்ன ஆவது என்று கிண்டலடிக்கிறார்கள் செய்தி விமர்சகர்கள்.

--------------------
கர்நாடகா
பாக்குத் தோட்ட விவசாயியின் பயனுள்ள கண்டுபிடிப்பு

மங்களூரு, ஜூன் 24
மங்களூரு மாவட்டம் சாஜிமூடா கிராமத்தை சேர்ந்த கணபதி பட் என்ற 60 வயது விவசாயி பாக்கு மரத்தில் ஏறும் வாகனம் ஒன்றை வடிவமைத்து இருக்கிறார். பாக்கு மரம் ஏற ஆள் கிடைக்காமல் போய் போய்விடுவதால் பாக்கு அறுவடை தாமதமாகி வந்தது. எனவே இப்படி ஒரு கருவியை உருவாக்கியிருக்கிறார் அவர். இது ஒரு டூ ஸ்ட்ரோக் பெட்ரோல் என்ஜின். இதன் எடை 28 கிலோ. 80 கிலோ எடையுள்ள ஒருவர் இதில் 30 செகண்டு களில் மரம் ஏறி விடலாம். கீழே இறங்க எஞ்சினை ஆப் செய்து விட்டால் போதும். ஒரு லிட்டர் பெட்ரோலில் 80 மரங்களில் ஏறி இறங்கி விடலாம் என்றார் கணபதி பட். இந்த என்ஜினை வடிவமைக்க அவருக்கு 75,000 ரூபாய் ஆனதாகத் தெரிகிறது. விரைவில் இந்த என்ஜினை தென்னை மரம் ஏறுவதற்கு ஏற்ப மாற்றி வடிவமைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சமூக வலைதளத்தில் இந்த இயந்திரம் பற்றிய வீடியோ வேகமாகப் பரவியது. இதையடுத்து மகேந்திரா கார் கம்பெனி இதை தானே உற்பத்தி செய்வது பற்றி யோசிக்கத் தொடங்கியுள்ளது.

----------------------

ஜார்க்கண்ட்
இலவச எரிவாயு: 100 சதவீதத்தை நோக்கி ரகுபர் தாஸ்

ராஞ்சி, ஜூன் 24

பாஜக அரசு நடக்கும் இந்த மாநிலத்தில் பிரதமர் உஜ்வலா திட்டத்தின் கீழ் இதுவரை இலவச எரிவாயு இணைப்பு அளிக்கப்படாத 14 லட்சம் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களில் இலவச எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ் தெரிவித்தார். “மாநிலத்தில் இதுவரை 29 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளது. 2014ல் மாநிலத்தில் 27% அளவுக்குத் தான் இலவச எரிவாயு இணைப்பு கிடைத்திருந்தது. கடந்த நாலரை ஆண்டுகளில் இது 82 சதவீதமாக உயர்ந்தது. வருகிற 60 நாட்களுக்குள் இதை 100% ஆக்க இருக்கிறோம்” என்று முதலமைச்சர் கூறினார். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நேர்மையான அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட ஒரு உஜ்வலா சகோதரியை கண்டறிந்து நியமிக்க்குமாறு மாவட்ட / ஒன்றிய சேர்மன்களையும் துணை சேர்மன்களையும் அவர் கேட்டுக் கொண்டார். இலக்கை அடைவதற்கு இந்த சகோதரிகளின் பங்களிப்பு பெரிதும் துணை புரியும் என்றார் அவர். அவர்களுக்கு அரசு உஜ்வலா திட்டம் பற்றி விரிவான பயிற்சி அளிக்கும். ஜூலையில் மாநிலம் நெடுக 1002 எரிவாயு இணைப்பு குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். நவம்பர்-டிசம்பரில் ஜார்க்கண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments