அஸாம்
பிளாஸ்டிக்கே வா, திஸ்பூர் பள்ளி அழைக்கிறது!
குவாஹாட்டி, ஜூன் 23
அசாம் மாநிலம் திஸ்பூரில் உள்ள அக்ஷர் போரம் பள்ளியில் பிள்ளைகளுக்கு ஒரு புதுவிதமான கட்டணம் விதித்திருக்கிறார்கள். வாரந்தோறும் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் வீட்டிலிருந்து 20 பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிக்கு கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அதுதான் அந்த பள்ளியில் கல்விக் கட்டணம். சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிற அந்த நகரில் தினந்தோறும் 37 டன் குப்பை குவிகிறது. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் மறுசுழற்சி இயக்கத்தில் தோள் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு பலன் இல்லாமல் போனதால் இந்த முறை கையாளப்படுகிறது. இப்படி பள்ளியில் சேரும் பிளாஸ்டிக் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் பைகளை திணித்து ’சுற்றுச்சூழல் செங்கல்’ தயாரிக்கிறார்கள். நடைபாதை அமைக்க, டாய்லெட் கட்ட, ஏன், புது பள்ளிக் கட்டிடமே கட்ட இந்த செங்கல்களை உபயோகிக்கிறார்கள். இந்த செங்கல் தயாரிக்கும் பிள்ளைகளுக்கு சிறு ஊதியமும் கிடைக்கிறது. நகரில் உள்ள கல் குவாரிகளில் வேலைக்குப் போய்விடாமல் பிள்ளைகள் பள்ளிக்கு வர இப்படிஒரு உத்தி!
கர்நாடகா
“ஓம் சூர்யாய நமஹ” சொல்லும் ஒரு சிற்றூர்
உடுப்பி, ஜூன் 23
உடுப்பி மாவட்டம் அமசேபயிலு கிராமத்தில் 100 சதவீத வீடுகளில் சூரிய சக்தி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 2016 ல் தொடங்கிய இந்த மாற்று எரிசக்தி திட்டம் ஜூன் 9 அன்று நிறைவேறியது. ஹலாதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில் மொத்த வீடுகள் 1858. இந்த இரண்டு கோடி ரூபாய் திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் 30:20 என்ற விகிதத்தில் நிதி அளித்தன. மீதி 50 % நிதியை பஞ்சாயத்தும் நன்கொடையாளர்களும் சேர்ந்து வழங்கினார்கள். விளக்கு அமைக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் விடப்பட்டது. விளக்குகளுக்கு ஐந்து வருட உத்திரவாதம் உள்ளது. ஒரு சோலார் மின்விளக்கு நிறுவுவதற்கு ரூ. 5,000 ஆகும். ஆனால் இந்த ஊர் வீடுகளுக்கு ரூ. 1,500 என்ற மானிய விலையில் சோலார் விளக்குகள் நிறுவித் தரப்பட்டன. “மின்சாரம் வருவதற்கு முன் நாம் மண்ணெண்ணெய் பயன்படுத்தினோம். இப்போது புதுப்பிக்கக் கூடிய இயற்கை எரி சக்தியை பயன்படுத்தி விளக்கெரிக்கிறோம். இதுபோல சூரிய சக்தியை திறன் மிக்க வகையில் பயன்படுத்த வேண்டும்” என்று ஜூன் 9 சூரியசக்தி திட்ட நிறைவு நிகழ்ச்சியில் பேசிய தர்மஸ்தலா தர்மாதிகாரி டாக்டர் டி வீரேந்திர ஹெக்டே கூறினார்.
கேரளா
மதம் பிஷப்பை என்னமாய் ரட்சிக்கிறது!
திருவனந்தபுரம், ஜூன் 23
கேரளத்தைச் சேர்ந்த பிஷப் பிராங்கோ முலக்கல் அருள் சகோதரியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருப்பவர். இவரை சேவல் போல் சித்தரித்து வெளிவந்த கார்ட்டூனுக்கு கேரள அரசின் லலித் கலா அகாடமி முதற்பரிசு அறிவித்தது. சர்ச் அமைப்புகள் இந்த ஆபாச கார்ட்டூனுக்கா முதல் பரிசு என்று சீறின. அந்த கார்ட்டூன் கிறிஸ்தவ மத சின்னங்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம்சாட்டின. கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும் பரிசு அறிவிப்பை ரத்து செய்யும்படி லலித் கலா அகடமிக்கு உபதேசம் வழங்கியுள்ளது. சிறுபான்மையினர் ஒத்துழைக்காததால் தான் லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் ஆளும் இடது முன்னணி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது என்று முடிவுகட்டி மார்க்சிஸ்ட் அரசு கிறிஸ்தவர்களைக் குறிவைக்கிறதா என்று கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் அமைப்பு கேள்வி எழுப்பியது. ”விஸ்வாசம் ரக்ஷதி“(மதம் காப்பாற்றுகிறது) என்று மலையாளத்தில் தலைப்பிட்ட அந்தக் கார்ட்டூன், பிஷப் முலக்கல் தன்னை கற்பழித்ததாக ஒரு அருள்சகோதரி குற்றம்சாட்டிய சம்பவத்தையடுத்து மலையாளப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்தது. கார்ட்டூனிஸ்ட் செங்களத்தை சேர்ந்த கே. கே. சுபாஷ்.
மகாராஷ்டிரா
கட்சிரோலி குண்டுவெடிப்பு கொலையாளிகள் பிடிபட்டார்கள்
நாகபுரி, ஜூன் 23
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் மே ஒன்றாம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி பாதுகாப்பு படையினர் 15 பேரையும் ஒரு சிவிலியனையும் படுகொலை செய்த இரண்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று நாகபுரி காவல்துறை கண்காணிப்பாளர் சைலேஷ் தெரிவித்தார். நர்மதா என்ற பெண், அவருடைய கணவர் கிரண் ஆகிய இருவர்தான் அந்த நக்சலைட்டுகள். இருவரும் ஹைதராபாத் சென்று திரும்பி வரும் போது காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள் இதற்கு தெலுங்கானா காவல்துறையும் ஒத்துழைத்திருக்கிறது. நர்மதா கேன்சர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஹைதராபாத் போயிருக்கிறாள் என்பது இவர்களை கண்காணித்து வந்த காவல்து்றைக்குத் தெரியவந்தது. அதை அடுத்து இந்த கைது நடவடிக்கை.
0 Comments