SETU-23

இந்த ஞானம் வந்தால் பின் வேறென்ன வேண்டும்?
ஹைதராபாத் (ஆந்திரப் பிரதேசம்), ஜனவரி 1, 2019

ஆந்திர பிரதேச அறநிலைய துறையின் ஹிந்து தர்ம பரிரக்ஷண டிரஸ்ட் அமைப்பு ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1 ம் தேதி மாநிலத்தில் உள்ளகோயில்களில் புத்தாண்டு தரிசனத்திற்கோ அலங்காரத்திற்கோ செலவிடக் கூடாது என்று சென்ற ஆண்டு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இந்த இந்த ஆண்டும் அதே போல தகவல் அனுப்பியுள்ளது .சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளான பிறகும் ஏன் ஹிந்துக் கோயில்கள் கிறிஸ்தவ புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை உணர்த்தியது குறிப்பிடத்தக்கது. யுகாதிதான் தெலுங்கு புத்தாண்டு, அதைத்தான் கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சென்ற ஆண்டு கர்நாடகத்திலும் கலாச்சார பாதுகாப்பு அமைப்புகள் புத்தாண்டு கொண்டாட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தன. தமிழகத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு புத்தி வந்திருக்கிறது. ’புத்தாண்டு’ கூத்துக்களுக்கு மின்சாரத்தை வீணடிப்பது குறைந்திருக்கிறது.

கலவரத்தின் மூலவிசை கூண்டில்
புலந்த்ஷஹர் (உத்தரப் பிரதேசம்), ஜனவரி 1, 2019
பசுவை வணங்கும் மக்களின் ஆவேசத்தை தூண்டும் வகையில் பசுவதை நடந்ததால் புலந்த்ஷஹரில் கலவரம் ஏற்பட்டு அதில் சுமித் என்ற நபரும் சுபோத் சிங் என்ற காவலரும் கொல்லப்பட்டார்கள். தற்போது அந்தப் பசுவதைக்குக் காரணமானவர் என்று கூறப்படும் ஹரூண் என்பவரை மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள். அவரிடமிருந்து லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி ஒன்று, தோட்டாக்கள், ஒரு ஜீப் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளார்கள். ஹரூண் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்துக்கிடமான 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தார்கள். இதற்கிடையில் மரணமடைந்த போலீஸ்காரர் சுபோத் சிங்கால் மார்பில் சுடப்பட்டு இறந்த சுமித் குடும்பத்திற்கு உதவி கோரி மக்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். கொல்லப்பட்ட போலீஸ்காரருக்கு மட்டும் அரசு உதவி கிடைத்துள்ளது. தொகுதி எம்எல்ஏ தேவேந்திர லோதி இதுபற்றி மாநில முதலமைச்சரிடம் எடுத்துக் கூறுவதாக வாக்குறுதி அளித்தார். சுமித்தைக் கொன்றதற்காக அந்த போலீஸ்காரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினார்கள்.

உங்கள் ரிமோட் உங்கள் கையில்!
புது டில்லி (டில்லி), ஜனவரி 1, 2019

உங்கள் தொலைக்காட்சிப் பெட்டி திரையில் காட்டப்படும் சேனல்களின் பட்டியலில் ஒவ்வொரு சேனலுக்கும் பக்கத்தில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கட்டணத் தொகை தெரிவதை பார்த்திருப்பீர்கள். பாரத டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) புதிய விதிமுறைப்படி நீங்கள் சேனல்கள் தேர்வு செய்ய ஜனவரி 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களை தேர்வு செய்தபடி மாற்றி வழங்கும் போது குழப்பமில்லாமல் இருப்பதற்காக இந்த கால அவகாசம். சேனல் வழங்கும் நிறுவனங்கள். ஆணையத்தின் புதிய விதிமுறைகளை கடைபிடிப்போம் என்று கூறியிருக்கிறார்கள் என ஆணைய செயலர் எஸ். கே. குப்தா கூறினார். 2017 மார்ச்சில் கட்டண / இலவச சேனல்களுக்கான ஒழுங்கு, கட்டண விகிதம் பற்றி ட்ராய் வெளியிட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர் கொண்டாடிய தஞ்சைத் தமிழன் புகழ்
ஜம்மு ஜம்மு-காஷ்மீர் ஜனவரி 1 2019

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பாலான பள்ளிகள் டிசம்பர் 24 அன்று தேசிய கணித தினத்தை உற்சாகம் பொங்கக் கொண்டாடின. உலக புகழ் பெற்ற தஞ்சைத் தமிழர் கணித மேதை இராமானுஜன் பிறந்த நாளே கணித தினம் என்பது நினைவிருக்கலாம். அன்றைய தினம் ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி வினா, வாய்ப்பாடு ஒப்பித்தல் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குழந்தைகள் பரிசுகளை அள்ளினார்கள். குறிப்பாக பாரதீய சிக்ஷா சமிதி நடத்தும் பாரதிய வித்யா மந்திர் பள்ளிகளில் உற்சாகம் அலைமோதியது. பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக ஜம்மு-காஷ்மீர் குழந்தைகள் பாரதத்தின் தொன்மையான கணித அறிவியல் பாரம்பரியத்தை பற்றி நிறைய தெரிந்து கொண்டார்கள். முக்கியமாக கணக்குப் பாடத்தை மாணவர்களுக்கு இனிப்புப் பாடமாக்கும் உத்தி கணித தின நிகழ்ச்சிகளில் நன்றாகத் தெரிந்தது.

Post a Comment

0 Comments