16-11-2012
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
ஜாதி மோதலும், தீண்டாமையும் ஒழிய இந்து சமுதாய ஒற்றுமை ஏற்படுத்துவதே வழி என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்..
நாடார்களைப் பற்றி இழிவாகக் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதியைப் பாடப்புத்தகத்தில் இருந்து மத்திய அரசு உடனே நீக்க வேண்டும்..
சமீபத்தில் பரமக்குடியிலும், தர்மபுரியிலும் இந்து சமூகத்தின் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் பழைய விரோதத்தின் தொடர்கதையாக வெளிப்பட்டுள்ளது. இது துரதிருஷ்டமானதும், வேதனை தரக்கூடியதுமான செயல்.
மத நல்லிணக்கம் பற்றி எல்லா அரசியல் கட்சிகளும் பேசுகின்றன; வலியுறுத்துகின்றன. அவை ஏன் சாதீய நல்லிணக்கத்திற்குப் பாடுபடுவதில்லை? அவர்கள் முன் வந்து அமைதியை ஏற்படுத்த முனைவதில்லை?
பல சாதீயக் கலவரங்களுக்கு அரசியல் கட்சிகள் தான் காரணமாகவோ, ஆதரவாகவோ செயல்படுவதாகவும், அதற்குச் சாதி ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே தூண்டிவிடுகின்றனர் என்றும் மக்கள் கருதுகிறார்கள். இந்தப் போக்கை அரசியல் கட்சிகள் கைவிட்டு, இந்து சமுதாய ஒற்றுமைக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.
இரு சமூகங்களிடையே சண்டை சச்சரவு, மோதல் வெடித்துள்ள நிலையில் சமூகப் பிளவை நிரந்தரமாக ஏற்படுத்த சிலர் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல பேசவும், தூண்டிவிடவும் செய்கிறார்கள். இவர்களை எச்சரிப்பதால் மட்டும் காவல்துறையோ, அரசோ அவர்களின் சதிச் செயலைத் தடுத்துவிடமுடியாது. அவர்களின் பின்புல சக்திகளைக் கண்டறிய தொடர் கண்காணிப்போடு செயல்பட்டு ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து சமூகத்தின் அனைத்து ஜாதியிலும் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள், சமூக நல்லிணக்கம் நிலைக்க அந்த நல்லவர்கள் வல்லவர்களாகி முன் வந்து அமைதிக்கு வழிகாண வேண்டும். ஜாதிய ஏற்றத்தாழ்வை நீக்கவும், தீண்டாமை ஒழியவும் பாடபட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இந்து சமுதாய ஒற்றுமைக்கு அனைத்து இந்து இயக்கங்கள், அமைப்புகள் முனைப்பு காட்ட வேண்டும்.
வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய தமிழகத்துத் துறவியர் பெருமக்கள் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று சமூக நல்லிணக்கம் ஏற்பட முயற்சி எடுத்துள்ளார்கள். அந்தப் பகுதிகளில் உள்ள மக்களைச் சந்தித்து நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சமூக ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்திற்கும் கோயில் தேரோட்டங்கள் சிறந்த வழிகாட்டின. எனவே அரசு எல்லா ஆலயத் திருத்தேர்களையும் சீர்செய்து, தேரோட்டம் நடைபெறவும், அதன் மூலம் சாதி வேறுபாடுகளால் ஏற்படும் சச்சரவுகள் மறைந்து சமூக நல்லிணக்கம் ஏற்படவும் ஆவன செய்ய இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
தமிழக அரசு அனைத்து இந்து சமூகப் பெரியவர்களை, இந்து இயக்கப் பொறுப்பாளர்களை அழைத்து அமைதிக் கூட்டம் நடத்தி அதன் மூலம் பரஸ்பர நம்பிக்கை உண்டாக்கி கலவரம் மேலும் நீடிக்காமல் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதோடு, மக்கள் மனங்களில் விரோத மனப்பான்மை நீங்கவும், நல்லுறவு ஏற்படவும் இது வழிவகை காணும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பள்ளிப் பாடத்தில் இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதிகளை நீக்குக...
இந்து சமுதாயத்தில் எந்தச் சாதியினரையும் இழிவுபடுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. நடுவணரசு பாடத்திட்டத்தில் 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சாதியை இழிவுப்படுத்தி வெளியிட்டுள்ளது, வெள்ளைக்கார கிறிஸ்வர்களின் தயாரிப்பான மெக்காலே கல்வித்திட்டத்தின் வெளிப்பாடு ஆகும்.
தீண்டாமை, ஜாதி ஏற்றத்தாழ்வைச் சமுதாயத்தில் ஏற்படுத்தி இந்து சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைத்தவர்கள் வெள்ளைக்காரர்களும், பாதிரிமார்களும் தான் என்பதற்கு அவர்களே வைத்துள்ள ஏராளமான சான்றுகள் உள்ளன.
அதே வழியில் இப்போதும் கல்வித் திட்டம் சென்று கொண்டு இருக்கிறது என்பதற்கு உதாரணமாக, தற்போது நடுவணரசு (சி.பி.எஸ்.சி.) பாடத்தில் நாடார்களை இழிவுபடுத்தும் சொற்றொடரும், கிறிஸ்தவக் கல்விச் சேவையைத் தூக்கிப்பிடிக்கும் பகுதிகளும் இருக்கின்றன.
இந்து சமுதாயத்தின் எந்தப் பிரிவினரையும் கேவலப்படுத்தும் செயலை இந்து முன்னணி பொறுத்துக் கொள்ளாது. நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க வேண்டிய கல்வி, சமுதாயத்தில் பிரிவினையையும், காழ்ப்புணர்ச்சியையும், பாகுபாட்டையும் வளர்க்கும் வகையில் பாடத்தினைக் கொண்டுள்ளது வேதனை அளிக்கிறது. மத்திய அரசு உடனே புத்தகத் தயாரிப்பு நிறுவனத்திற்குத் தகுந்த ஆணை வழங்கி, அந்தப் பாடத்தினை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
0 Comments