இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
நித்திய அன்னதானத் திட்டை வரவேற்கிறோம்,
தமிழக முதல்வரைப்பாராட்டுகிறோம்..
தமிழகத்தின் முக்கியத் திருக்கோயில்களில் நித்திய அன்னதான திட்டத்தை அறிவித்து செயல்படுத்த உத்திரவிட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை இந்து முன்னணி பாராட்டுகிறது.
தமிழக திருக்கோயில்களில் தொன்றுதொட்டு பல்வேறு அறங்கள் நடைபெற்று வந்தன. அதில் முக்கியமானது அன்னதான தர்மம். அதனை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தவர் தமிழக முதல்வர் அவர்கள். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து பழிபடும் முக்கிய திருத்தல ஆலயங்களில் நித்திய அன்னதான திட்டத்தை அறிவித்து ஷ்ரீரங்கம் ஆலயத்தில் துவக்கி வைத்துள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.
இந்த அன்னதானத்தை இறைவனுக்கு நிவேதனம் செய்து, அன்னபிரசாதமாக பக்தர்கள் வழங்கிடவும், உணவு உண்ணும் முன் பக்தர்கள் அந்தத் தல இறைவனின் நாமவாளியைப் பாராயணமாக, அதாவது, `ஓம் நமோநராயாணா', `ஓம் நமச்சிவாயா', `ஓம் சரவணபவா', `ஓம் சக்தி' - என அதற்குரிய இறைவன் நாமாவளியை எல்லோருமாக சொல்லி சாப்பிடுவது, பக்தர்களின் மனங்களில் அத்தல இறைவன் அருளால் இந்த அன்னப்பிரசாதம் கிடைத்திருக்கிறது என்ற பக்தி ஏற்படுத்தும். இந்த பக்திபூர்வமான செயல்பாட்டை ஆலயத்தில் உள்ள பட்டாச்சார்யர்கள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் மூர்த்திகள் முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது வழக்குமொழி. நாம் செயல்பட சக்தி வேண்டியிருக்கிறது. அந்தச் சக்தியை தருவது அன்னம். இந்த உடலை அன்னமய கோஷம் என்று யோக நூல்கள் கூறுகின்றன. உடல் இயங்க சக்தியை அளிப்பது அன்னம். அதுவும் திருக்கோயில் இறைவனை தரிசிக்க வரும் பக்தர்கள் அளிக்கும் அன்னபிரசாதம் அறம் வளர்க்கும் நல்லதோர் செயல்பாடு.
இந்த அறக்கொடை தொடர்ந்து நடைபெறவும், இந்து சமய அறநிலையத்துறை செயல்திட்டம் வகுக்க வேண்டும். மேலும் இந்த நற்செயலுக்கு தமிழக அரசின் முக்கிய பங்கேற்பும் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
0 Comments