இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
பாகிஸ்தானில் வாழும் இந்துக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1947ஆம் ஆண்டு, பாரதம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்தது என்றாலும், அதனுடன்கூட விளைந்த விபரீதம் என்ற மறக்கமுடியாத கரை படிந்த சரித்திரத்தை நமது தலைவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்பதும் உண்மை. அது இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது.
பாரத தேசத்தை மத ரீதியில் பாகுபாடுபடுத்தி வெட்டிப் பிளந்தனர். நாட்டைப் பிளக்கவிடமாட்டேன்; அதனைத் தடுக்க எனது உயிரையும் தருவேன் என்று சூளுரைத்து மக்களை நம்ப வைத்தத் தலைவர்கள், பிரிவினையை வலியுறுத்தி நடந்த கோரத்தாண்டவத்தைத் தடுக்கத் தவறியது மட்டுமல்ல, தேசப் பிரிவினைக்குத் தலையசைத்து கையெழுத்தும் இட்டனர்.
மதத்தின் அடிப்படையில் ஒன்றாயிருக்க முடியாது என்று பிரிவினையைத் தூண்டியவர்களின் வாதத்தை நமது மக்களோ, நமது நாட்டுத் தலைவர்களோ ஏற்காமல் இருந்திருக்கலாம்; பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை உருவாக்க பல லட்சம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தவர்களின் பிடிவாதத்தைப் புரிந்துகொண்டு அங்கு துன்பத்திற்கு உள்ளான மக்களைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை.
விரட்டி அடிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் பாரதத்தில் தஞ்சம் புகுந்தனர். சொந்த நாட்டில் அகதிகளாய் வாழ்ந்தவர்கள் காலப்போக்கில் தங்கள் வாழ்க்கையை அவர்களே அமைத்துக் கொண்டனர். ஆனால் பாகிஸ்தானிலிருந்து தப்பி வரமுடியாத நிலையில் பல கோடிபேர் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்கள் 65ஆண்டுகளில் சில லட்சங்களாகச் சுருங்கிப் போய் உள்ளனர் என்பதிலிருந்து அங்கு எத்தகைய இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும். பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் மதவாதிகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள். கடத்தப்பட்டும், கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டும் வருகிறார்கள், சுதந்திரமாக வாழ வழியின்றி தவிப்பதைப் பாரத அரசு கண்டும் காணாததுபோல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
நமது அண்டை நாட்டில் அமைதி நிலவினால் தான் நமது நாடும் அமைதியாக இருக்க முடியும். அங்கு நடக்கும் அத்துமீறலை அந்நாட்டு அரசோ, காவல்துறையோ, இராணுவமோ கண்டிக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து பாரதத்திற்கு அகதிகளாக வரவும் பல்லாயிரக்கணக்கானோர் முயன்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்னையைச் சர்வதேச அளவில் எடுத்துச் சென்று, பாகிஸ்தானின் மனித உரிமை மீறலுக்குத் தீர்வு கண்டு, பாகிஸ்தான் அரசு, அங்கு வாழும் இந்துக்களைக் கண்ணியமாக நடத்திடவும், அவர்களை அடிப்படை உரிமையோடும், நம்பிக்கையோடும் வாழ ஏற்பாடு செய்யவும் வலியுறுத்த வேண்டும். இந்துப் பெண்களைக் கடத்துவோரையும், வியாபாரிகளைக் கடத்தி பணம் பறிப்போரையும் கடுமையாக தண்டிக்க பாகிஸ்தான் அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.
பாகிஸ்தானின் மனித உரிமை மீறலைச் சர்வதேச அளவில் கொண்டு சென்று, பாகிஸ்தானுக்குப் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தினால் மட்டுமே அங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டூழியம் ஒரு முடிவுக்கு வரும்.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்களைக் காப்பாற்றுவது நமது தார்மீகக் கடமை என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
இவற்றைக் கவனத்தில்கொண்டு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியிலான அரசு விரைந்து செயல்பட்டு பாகிஸ்தானில் வாழும் இந்துக்களைக் காத்திட நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
0 Comments