மாநில செயற்குழு, திருவாரூர் 2012
ஸ்ரீ நந்தன ஆண்டு ஆடி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் (2012, ஆகஸ்ட் 13,14) திருவாரூர் கமலாலயம் குளம் தென்கரை இராசாம்பாள் திருமண மண்டபத்தில் பாரதீய கிசான் சங்க அகில பாரத அமைப்புச் செயலாளர் திரு. தினேஷ் குல்கர்னி ஜிமற்றும் தென்பாரதச் செயலாளர் திரு. ஸ்ரீகணேசன் ஜி ஆகியோரது வழிகாட்டுதலில் நடந்த பாரதீய கிசான் சங்கம், தமிழ்நாடு மாநில செயற்குழுவில் ஏகமனதாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:-
1. அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment) ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 12 லட்சம் இந்திய வியாபாரிகளையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதால் மத்திய அரசு அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமெனவும் அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும் மாநில அரசு, மத்திய அரசை அதற்கு தடைசெய்ய கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் பாரதீய கிசான் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
2. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மழை குறைந்து விவசாயம் பொய்த்துவிட்டதால், அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளது அனைத்துக் கடன்களையும் ரத்து செய்து, ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு ரூபாய் பத்தாயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பா.கி.ச வேண்டுகிறது.
3. கடந்த ஓராண்டில் மட்டும் பொட்டாஷ், டி.ஏ.பி. போன்ற உரங்களின் விலை முறையே 5 மடங்கு 4 மடங்கு எனக் கூடியுள்ளதால் விவசாயிகள் உரம் வாங்கமுடியாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உரக்கம்பெனிகளுக்கு வழங்கும் மானியத்தை அரசு நேரடியாக விவசாயிக்கு வழங்க வேண்டுமெனவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டுமெனவும், இயற்கை விவசாயத்திற்கு ஆதாரமாகவும் அடிப்படையாகவும் உள்ள பாரம்பரிய பசுக்களைப் பாதுகாக்கவும், அவை மாட்டிறைச்சிக்காக வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்வதைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பாரதீய கிசான் சங்கம் வேண்டுகிறது.
4. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தால் விவசாய வேலைகள் செய்ய முடியாமல் விவசாயமே செய்யமுடியாத நிலையில் உள்ளதால், இதற்கு மாற்றாக விவசாய வேலைகள், வாய்க்கால் செப்பனிடல், நீர்நிலைகளில் தூர்வாருதல் போன்றவற்றில் அவர்களை ஈடுபடுத்த மத்திய, மாநில அரசுகளை பா.கி.ச வேண்டுகிறது.
5. நமது நாட்டைப் போலவே அதிகம் கரும்பு விளையும் நாடான பிரேசிலில் 40-50 சதவிகித வாகன எரிபொருளாக எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. கரும்புக் கழிவிலிருந்து மக்களின் ஆரோக்யத்தை அழிக்கும் சாராயம் காய்ச்சும் பழக்கத்தைக் கைவிட்டு, எத்தனால் தயாரித்து விவசாயிகள் வழங்கும் கரும்பிற்கு நல்ல விலை கிடைத்திட மத்திய, மாநில அரசுகளை பா.கி.ச வேண்டுகிறது.
6. டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூடவேண்டுமென பா.கி.ச. வேண்டுகிறது.
7. தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் வறட்சி மாநிலமாக மாறிவருகிறது. விவசாயத்திற்கு போதுமான நீர் இல்லை. நீர்நிலைகளில், அணைகளில் நீண்ட நெடுங்காலமாக தூர்வாராதது, தங்குதடையின்றி நடந்துவரும் மணற்கொள்ளை, அண்டை மாநிலங்களுடன் நீர்ப்பங்கீடு சம்பந்தமான ஒப்பந்தங்களை காலாகாலத்தில் புதுப்பிக்காதது, நதிநீர் இணைப்பில் போதிய செயலின்மை போன்றவைகளையே இதற்குக் காரணமென பா.கி.ச. கருதுகிறது. உரிய நடவடிக்கைகள் எடுக்க மத்திய, மாநில அரசுகளை பா.கி.ச. கேட்டுக் கொள்கிறது.
8. தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் விவசாயிகளது கடன்களை ரத்து செய்து அனைத்து உதவிகளையும் வழங்கிட மாநில அரசை பா.கி.ச. கேட்டுக்கொள்கிறது.
9. மஞ்சளுக்கு குவிண்டால் 10,000 என விலை நிர்ணயம் செய்திட பா.கி.ச. வேண்டுகிறது.
மாநில செயற்குழு கூட்டத்திற்கு 18 மாவட்டங்களிலிருந்து 76 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments